தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓங் யி காங்: காப்புறுதித் திட்டத்தை வேறு நிறுவனத்துக்கு மாற்றுவது குறித்த ஆய்வு இவ்வாண்டு நிறைவடையலாம்

2 mins read
0d10e711-29f0-4d0a-b331-430d87c845d0
சனிக்கிழமை (ஏப்ரல் 27) நடைபெற்ற வேகநடை நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒரு நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட தனிப்பட்ட காப்புறுதித் திட்டத்தை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்வது குறித்து சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் ஆய்வு இவ்வாண்டு நிறைவடையக்கூடும்.

சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 27) இதனைத் தெரிவித்தார்.

நடப்பில் இருக்கும் நிபந்தனைகள் காரணமாக சிலரால் தங்களின் காப்புறுதித் திட்டங்களை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ள முடியவில்லை என்று அண்மையில் ஊடகங்களில் வெளியான கட்டுரைகளில் தெரியவந்தது. அதுகுறித்து திரு ஓங் பேசினார்.

“காப்புறுதித் திட்டங்களை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்வது குறித்து சில காலமாக நாங்கள் ஆய்வு நடத்திவருகிறோம். இவ்வாண்டுக்குள் அது நிறைவடையக்கூடும்,” என்று திரு ஓங் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டத்தை (ஐபி) முழுமையாக வேறு நிறுவனத்திடம் மாற்றிக்கொள்வது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகிறது. 2021ஆம் ஆண்டில் இது அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே உள்ள மெடி‌‌‌ஷீல்ட் லைஃப் திட்டத்துக்கும் மேல் ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டம் கூடுதல் காப்புறுதி வழங்குகிறது.

வேறு நிறுவனங்கள் வழங்கும் குறைந்த சந்தா உள்ள அல்லது கூடுதல் மருத்துவர்களை உள்ளடக்கும் காப்புறுதித் திட்டங்களுக்கு மாறிக்கொள்ள வாடிக்கையாளர்கள் விரும்பலாம். ஆனால், தற்போது நடப்பில் இருக்கும் நிபந்தனைகள் காரணமாக அவர்களால் அவ்வாறு செய்ய முடியாமல் போகலாம்.

அத்தகையோரின் அக்கறைகளை ஆராய்வதே சுகாதார அமைச்சு நடத்தும் ஆய்வின் நோக்கமாகும்.

இதுகுறித்து ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் வாசகர் மன்றம் (ஃபாரம்) பிரிவுக்குக் கடிதங்களை அனுப்பியிருந்தனர். வர்த்தகக் காரணங்களால் சம்பந்தப்பட்டோரின் காப்புறுதித் திட்டங்கள் அகற்றப்பட்டது, காப்புறுதித் திட்டத்தில் இருந்த மருத்துவர்கள் விலகியதால் வேறு மருத்துவர்களை நாடவேண்டிய சூழல் ஏற்பட்டது போன்ற கவலைகள் அக்கடிதங்களில் முன்வைக்கப்பட்டன. காப்புறுதித் திட்டங்களை வழங்கும் நிறுவனங்கள் விதிமுறைகளை மாற்றியதால் இத்தகைய பிரச்சினைகள் எழுந்தன.

காப்புறுதித் திட்டங்களை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்வது எளிதான நடவடிக்கை அல்ல என்பதை அமைச்சர் ஓங் சுட்டினார்.

“இதைச் சாத்தியமாக்கும் முயற்சியில் காப்புறுதி நிறுவனங்கள் அதிகம் ஈடுபடவில்லை என்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம்,” என்றார் திரு ஓங். “காப்புறுதித் திட்டத்தை வேறு நிறுவனத்துக்கு மாற்ற வகைசெய்யும்போது ‘எங்களிடம் வராமல் இருப்பது நல்லது; காரணம், அவ்வாறு செய்தால் வாடிக்கையாளர்கள் எங்களிடம் எதிர்பார்க்கும் இழப்பீட்டுத் தொகையும் அதிகரிக்கும், அனைவருக்குமான சந்தா கூடும்’ என்றே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கூறும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

செம்பவாங் சென்ட்ரலில் நடைபெற்ற வேகநடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது திரு ஓங் செய்தியாளர்களிடம் பேசினார்.

குறிப்புச் சொற்கள்