மாணவ விளையாட்டு வீரர்களுக்குப் புதிய உபகாரச் சம்பளத் திட்டம்

2 mins read
5fb5ced7-2664-4f80-9aa2-b5b7c383fc7b
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: சாவ் பாவ்

பல்கலைக்கழகங்களில் பயிலும் இளம் சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள் தங்களின் கல்விச் செலவுகளுக்குக் கைகொடுக்கும் வகையில் புதிய உபகாரச் சம்பளத் திட்டத்திற்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஏப்ரல் 26ஆம் தேதி தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை உன்னதத்திற்கான உபகாரச் சம்பளத்தின் விரிவாக்கமான இந்தப் புதிய உபகாரச் சம்பளம், பல்கலைக்கழகங்களில் படித்துக்கொண்டே விளையாட்டில் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்களுக்கு ஆதரவாக  இருக்கும்.

விளையாட்டில் தங்களின் இலக்குகளை எட்டிய பிறகும்கூட பல்கலைக்கழகப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் வீரர்கள், இந்த உபகாரச் சம்பளம் மூலம் பயன் பெறலாம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு திரு லாரன்ஸ் வோங் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சில் இருந்தபோது விளையாட்டுத்துறை உன்னதத்திற்கான உபகாரச் சம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியின் 20ஆவது ஆண்டுவிழா மற்றும் விருது விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு வோங் சிறப்புரையாற்றினார்.

இந்தாண்டின் பிற்பகுதியில் புதிய உபகாரச் சம்பளத் திட்டத்தின் விவரங்கள் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சருமான அவர், “விளையாட்டுகளின் ஆற்றல் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நம்மால் முடிந்தவரை சிங்கப்பூரில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவோம். அனைவரையும் விளையாட்டுகளில் ஈடுபடுத்தத் திட்டங்கள் அறிமுகப்படுத்தவுள்ளன. உடற்குறை உள்ளவர்களும் மூத்தோரும் அதில் அடங்குவர்,” என்று சொன்னார்.

ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாணவ விளையாட்டு வீரர்களால் திரட்டப்பட்ட $41,888 மதிப்புள்ள காசோலை, சிங்கப்பூர் உடற்குறை விளையாட்டு மன்றத்திற்கு வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் விளையாட்டுப்பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவப் பிரிவில் அடங்கும் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் சாந்தி பெரேராவுக்குத் தலைசிறந்த விளையாட்டுச் சாதனை விருது கிடைத்தது.

குறிப்புச் சொற்கள்