வேலையிடத்தில் படுகாயம் அடைந்து மாண்ட பங்ளாதேஷ் ஊழியர்

வேலையிடத்தில் படுகாயம் அடைந்து மாண்ட பங்ளாதேஷ் ஊழியர்

1 mins read
865f14a3-6bd7-4f13-b22e-19f566127338
ஃபோர்க்லிஃப்ட் பாரந்தூக்கியின் கூர்மையான பகுதி திரு பிஸ்வாஸ் சஞ்சய் குமாரின் கழுத்தில் பட்டதில் அவர் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. - படம்: ஓஜா தப்பாஸ்

வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் மருத்துவமனையில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கை காடுட் வட்டாரத்தில் உள்ள பெங் செங் உலோக ஆலையில் 37 வயது திரு பிஸ்வாஸ் சஞ்சய் குமார் பணிபுரிந்தார். அவர் அந்த நிறுவனத்தில் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் 16ஆம் தேதியன்று, ஃபோர்க்லிஃப்ட் பாரந்தூக்கி இயக்கியவருடன் இணைந்து திரு பிஸ்வாஸ் வேலை செய்துகொண்டிருந்ததார்.

எந்தெந்த பொருள்களைத் தூக்கி வைப்பது என்பது குறித்து ஃபோர்க்லிஃப்ட் பாரந்தூக்கியை இயக்கிக்கொண்டிருந்தவரிடம் அவர் உரக்கமான குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

திடீரென்று அவரிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை.

ஃபோர்க்லிஃப்ட் பாரந்தூக்கியை இயக்கிய ஊழியர் சென்றுபார்த்தபோது திரு பிஸ்வாஸ் படுகாயம் அடைந்தது தெரியவந்தது.

ஃபோர்க்லிஃப்ட் பாரந்தூக்கியின் கூர்மையான பகுதி அவரது கழுத்தின்மீது பட்டதில் திரு பிஸ்வாஸ் காயமடைந்தார்.

பதற்றமடைந்த ஃபோர்க்லிஃப்ட் ஓட்டுநர், ஆம்புலன்சுக்காகக் காத்திருக்கவில்லை. அவரது காரிலேயே திரு பிஸ்வாசை இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு சென்றார்.

ஆனால், திரு பிஸ்வாஸ் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 22ஆம் தேதியன்று உயிரிழந்ததாக பெங் செங் உலோக ஆலையின் இயக்குநர்களில் ஒருவரான திரு ஆல்வின் லிம் தெரிவித்தார்.

திரு பிஸ்வாசுக்கு மனைவி, 18 மாதப் பெண் குழந்தை, தாயார் ஆகியோர் உள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது.

குறிப்புச் சொற்கள்