சிங்கப்பூர்-இந்தோனீசிய உறவுகளைத் தொடர உறுதி

பிரதமர் லீ, அதிபர் விடோடோ ஓய்வுதளச் சந்திப்பு

போகோர்: பிரதமர் லீ சியன் லூங்கும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் ஏப்ரல் 29ஆம் தேதி இரு நாட்டு ஒத்துழைப்பை வருங்காலத்திலும் தொடர உறுதியளித்தனர்.

போகோர் அரண்மனையில் இரு தலைவர்களின் ஏழாவது ஓய்வுத்தளச் சந்திப்பு இடம்பெற்றது. இவ்வாண்டு இரு தலைவர்களும் பதவி விலகவிருப்பதால் இதுவே அவர்களின் இறுதி ஓய்வுத்தளச் சந்திப்பாகும்.

இதில், கடந்த பத்து ஆண்டுகளில் இருதரப்பு உறவில் ஏற்பட்ட முக்கியச் சாதனைகளை இருவரும் பாராட்டினர்.

சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் இந்தோனீசிய அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாந்தோவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

நான்கு தலைவர்கள் பங்குபெறும் இந்தச் சந்திப்பு குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தது என்று கூறிய பிரதமர் லீ, சிங்கப்பூரிலும் இந்தோனீசியாவிலும் புதிதாகத் தலைமைப் பொறுப்பு ஏற்கவிருக்கும் இரு தலைவர்களும் இரு நாட்டு உறவில் புதிய உச்சத்தை எட்டத் தொடர்ந்து உழைப்பர் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அதிபர் விடோடோவுடன் கலந்துகொண்ட கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், “தற்போதைய தலைமைத்துவத்திலிருந்து அடுத்ததற்கு மாறும் வேளையில், தற்போதைய வலுவான அடித்தளத்தை மேம்படுத்தவும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்று திரு லீ கூறினார்.

“இருதரப்பு உறவை நல்ல நிலையில் புதிய தலைவர்களின் கரங்களில் ஒப்படைப்பதில் எனக்கும் அதிபர் விடோடோவுக்கும் மகிழ்ச்சி,” என்றார் அவர்.

இந்தச் சந்திப்பு இரு நாட்டு ஒத்துழைப்பு தொடரும் என்பதற்கான வலுவான அறிகுறி என்று அதிபர் விடோடோ கூறினார்.

தற்காப்பு, பசுமைப் பொருளியல் போன்ற சில துறைகளில் இரு நாட்டு வளர்ச்சியை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

சிங்கப்பூருக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்தல், தொழில்நுட்பப் பரிமாற்றத்தில் ஒத்துழைப்பு, உணவு பதப்படுத்தலில் அறிவியல், தொழில்நுட்ப அம்சங்களின் பரிமாற்றம் ஆகிய திட்டங்களைத் திரு விடோடோ பாராட்டினார்.

கிழக்குக் கலிமந்தானில் புதிய தலைநகரான நுசந்தாராவின் கட்டுமானம் குறித்துப் பேசிய அவர், சிங்கப்பூரின் 29 நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாகக் கூறினார். மேலும், அந்நகரில் சூரியசக்தி ஆலைகளைக் கட்டுவதற்கு ஆதரவு நல்கும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

வட்டார, உலக விவகாரங்கள் குறித்தும் திரு லீயும் திரு விடோடோவும் கலந்துரையாடினர்.

மத்திய கிழக்கில் அமைதியை ஊக்குவித்தல், ஆசியானை மையப்படுத்தும் போக்கை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

இவ்வேளையில், பிரதமர் லீ, அதிபர் விடோடோ இருவரின் தலைமைத்துவத்தின்கீழ், சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவிற்கும் இடையிலான உறவுகள் கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து வலுப்பெற்றதாகத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

ஏப்ரல் 29ஆம் தேதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இரு நாடுகளிலும் தலைமைத்துவ மாற்றம் இடம்பெறவிருக்கும் நிலையில், பொருளியல், தற்காப்பு, மின்னிலக்கம், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, மனிதவளம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பைத் தாங்கள் உறுதிசெய்ததாகத் திரு வோங் குறிப்பிட்டார்.

அதிபர் விடோடோவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட திரு வோங், புதிய அதிபர் பிரபோவோவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாகவும் இரு நாட்டுப் பங்காளித்துவத்தைப் புதிய உச்சத்திற்குக் கொண்டுசெல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!