$3 பி. மோசடி வழக்கு: ஐந்தாவது நபருக்கு 15 மாதச் சிறைத் தண்டனை

1 mins read
1fa8bad3-0bed-4cd4-b53b-412e43998ba7
சீன நாட்டவரான 45 வயது சாங் ருய்ஜின், இந்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஐந்தாவது நபராவார். - சித்திரிப்பு: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மூன்று பில்லியன் வெள்ளி கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐந்தாவது நபருக்கு 15 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை விதிக்கப்பட்ட ஆக அதிக காலச் சிறைத்தண்டனை இது.

சாங் ருய்ஜின் எனும் அந்த 45 வயது ஆடவர் சீன நாட்டவர். கரீபிய நாடான செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் வழங்கிய கடப்பிதழை அவர் வைத்துள்ளார்.

சாங், $118 மில்லியனை சிங்கப்பூர் அரசாங்கம் பறிமுதல் செய்வதற்கு ஒப்புக்கொண்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இது அவரது மொத்தச் சொத்து மதிப்பில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு.

சாங்கிடமிருந்து $131 மில்லியன் மதிப்புமிக்க சொத்துகள், ரொக்கம், வாகனங்கள், மின்னிலக்க நாணயங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாக அரசாங்கத் தரப்பு தெரிவித்தது.

மொத்தம் $36 மில்லியன் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதன் தொடர்பில் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை ஏப்ரல் 30ஆம் தேதி, சாங் ஒப்புக்கொண்டார்.

தண்டனை விதிக்கும்போது மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

2023 ஆகஸ்ட் 15ஆம் தேதி கைது செய்யப்பட்ட சாங்கும் அவரது காதலி லின் பாயிங்கும் எட்டு மாதங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டபோது தனது காதலியைத் தடுத்து வைக்கும்படியும் தன்னைப் பிணையில் விடுவிக்கும்படியும் சாங் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார். ஆனால், இருவருக்கும் பிணை மறுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்