ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் மீது அதன் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 41 வயது வாங் ஹுவாட்டே எனும் ஆடவர் மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. காவல்துறை அதிகாரி ஒருவருக்கு 20,000 வெள்ளி லஞ்சம் கொடுக்க முயன்றதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் அவற்றில் அடங்கும்.
வாங்கிற்குக் கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டது. ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதியன்று அவர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவர் மீது மீண்டும் இதே குற்றச்சாட்டுகளைச் சுமத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.
2020ஆம் அண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதிவாக்கில் ஹில்வியூ ரைஸ் கட்டடத்தில் உள்ள ஹில்வி2 கடைத்தொகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் 46 வயது பூ செ சியாங் எனும் ஆடவருக்கு வாங் 20,000 வெள்ளி லஞ்சம் வழங்க முயன்றதாகச் சந்தேகிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாங், வேறொருவருடன் சேர்ந்து 2,000 வெள்ளிகொண்ட ஹொங்பாவ் உறையை பூக்கு வழங்க முயற்சி செய்ததாகவும் நம்பப்பட்டது.
வாங் மீது காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் உதவுவது போன்ற காரணங்களுக்காக அப்போது காவல்துறை ஆய்வாளராக இருந்த பூக்குப் பணம் வழங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
பூ, 2020ஆம் ஆண்டு தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவரின் வழக்கு இன்னும் நீதிமன்ற விசாரணைக்கு வரவில்லை.