திருவாட்டி ஜோ லிம் தமது பல் அடிவேர் பிரச்சினைக்கு வழிதேடிக் கொண்டிருந்தார்.
அந்தப் பிரச்சினையை சரியாகக் கண்டுபிடித்து சிகிச்சைப் பெற பல சிங்கப்பூர் பல் மருந்தகங்களைத் தொடர்புகொண்டார். ஆனால் தேடிப் பிடித்த பல் மருந்தகங்களில் ஒன்று, சிகிச்சை நேரம் பெற நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருந்தது, அல்லது சிகிச்சைக்கு ஆகும் செலவு மிகவும் அதிகமாக இருந்தது.
ஒரு வாடிக்கையாளராக இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நன்கு அலசி ஆராய்ந்து இறுதியில் சிங்கப்பூரில் நிதித்துறை பிரதிநிதியாகப் பணிபுரியும் திருவாட்டி லிம் இறுதியில் ஸ்மைல் டெண்டல் லவுஞ்ச் என்ற பல் மருந்தகத்தின் டாக்டர் ஷிம் சுங் நாம் என்பவரைத் தேர்ந்தெடுத்தார்.
சாதாரண சிங்கப்பூர் பல் மருந்தகத்தைவிட ஒரே ஒரு வித்தியாசம். மருத்துவர் ஷிம் அவர்களின் மருந்தகம் ஜோகூர் பாருவில் இருக்கிறது.
“அவர் மிகவும் மென்மையானவர், விவரமாக எனக்கு எல்லாவற்றையும் விளக்கினார். எனக்குக் கிடைத்த அனுபவமோ அமைதி, வலியில்லாத சிகிச்சை. அந்த அனுபவம் அவர் மீது நம்பிக்கையை வளர்த்தது,” என்று திருவாட்டி லிம் தமது பல் சுத்தம் செய்த அனுபவத்தை நினைவுகூர்ந்தார். இது நடந்தது 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்.
திருவாட்டி லிம் பெற்ற இந்த அனுபவம் அவருடைய சிக்கலான பல் அடிவேர் சிகிச்சைக்கு மீண்டும் திரு ஷிம்மை அவர் மறுவாரமே நாடத் தூண்டியது.
திருவாட்டி லிம்மைப் போல் பல சிங்கப்பூரர்களுக்கு பல் சிகிச்சைக்கு ஜோகூர் பாருவில் உள்ள பல் மருந்தகங்களை நாடுவது ஒரு மாற்றுத் தேர்வாக விளங்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
சிங்கப்பூரிலிருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க ஜோகூர் பாரு குடிநுழைவு சோதனைச் சாவடியிலிருந்து 6 கிலோமீட்டர் தூர வட்டத்துக்குள் 20க்கும் மேற்பட்ட பல் மருந்தகங்கள் உள்ளன. ஜோகூர் பாரு நகர மையைத்தை தாண்டிச் செல்லச் செல்ல இன்னும் பல பல் மருந்தகங்கள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பலவிதமான பல் சிகிச்சை, பற்களை அழகுபடுத்தும் சிகிச்சை முறைகள் ஆகியவை இங்கிருந்து செல்லும் சிங்கப்பூர் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன. அத்துடன், தரத்தைப் பொறுத்தவரை சிகிச்சையில் எந்தக் குறையும் சொல்ல முடியாத மிகக் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

