ஸ்போர்ட் சிங்கப்பூர் (ஸ்போர்ட்எஸ்ஜி) அமைப்பு, இவ்வாண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல் அதன் புதிய மைஆக்டிவ்எஸ்ஜி+ தளத்தை வெளியிடும்.
ஆக்டிவ்எஸ்ஜி+ தளத்தைக் கொண்டு ஸ்போர்ட்எஸ்ஜி உறுப்பினர்கள் அதன் விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்தப் பதிவுசெய்யலாம்.
புதிய தளம் இதற்கு முன்பு சோதனையிடப்பட்டது. அதன் ‘ பேட்டா’ வடிவம் மார்ச் மாதம் முதல் தேதி அறிமுகமானது.
மைஆக்டிவ்எஸ்ஜி+ தளம், 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தனது ஆக்டிவ்எஸ்ஜி உறுப்பினர் செயல்பாட்டு முறைக்குப் (ஆக்டிவ்எஸ்ஜி மெம்பர்ஷிப் மேனேஜ்மென்ட் சிஸ்டம்) பதிலாகப் பயன்படுத்தப்படும் என்று ஸ்போர்ட்எஸ்ஜி வியாழக்கிழமையன்று (மே 2) தெரிவித்தது. ஆக்டிவ்எஸ்ஜி டெல்டா விளையாட்டு மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஸ்போர்ட்எஸ்ஜி இத்தகவலை வெளியிட்டது.
கடந்த சில ஆண்டுகளாகப் பயனர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட கருத்துகளைக் கொண்டு மைஆக்டிவ்எஸ்ஜி+ தளத்தில் அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன் ‘பேட்டா’ வடிவத்தைக் கொண்டும் அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மைஆக்டிவ்எஸ்ஜி+ ‘பேட்டா’ வடிவத்தை 2,000க்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.
உச்ச நேரங்களில் ஸ்போர்ட்எஸ்ஜி விளையாட்டு மையங்களை யார் பயன்படுத்தலாம் என்பது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். இதுவே மைஆக்டிவ்எஸ்ஜி+ தளத்தில் இடம்பெறும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
தற்போது முதலில் பதிவுசெய்பவரே சம்பந்தப்பட்ட விளையாட்டு வசதியைப் பதிவுசெய்த நேரத்துக்குப் பயன்படுத்தமுடியும். பதிவு முறையை வலுப்படுத்தி பொது விளையாட்டு வசதிகளைப் பதிவுசெய்யும் முறையின் மூலம் பிறர் லாபம் ஈட்டுவதைத் தவிர்க்க ஸ்போர்ட்எஸ்ஜி இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது.
“எளிமையான, பாதுகாப்பான தளத்தின் மூலம் எங்கள் பயனர்கள் வசதிகளுக்குப் பதிவுசெய்வதற்கு வகைசெய்வதை ஸ்போர்ட்எஸ்ஜி தனது பொறுப்பாகக் கருதுகிறது,” என்று ஸ்போர்ட்எஸ்ஜி தலைமை நிர்வாக அதிகாரி ஏலன் கோ தெரிவித்தார். உச்ச நேரங்களில் விளையாட்டு மையங்களைப் பயன்படுத்தப் பலர் பதிவுசெய்வதுண்டு; அந்த நேரத்தில் அவர்களுக்கு வசதிகள் கிடைக்காமல் போவது, இணையத்தில் மனிதர்களைப் போல் இயங்கும் ‘போட்ஸ்’ உள்ளிட்டவற்றால் வரும் பிரச்சினைகள் ஆகியவற்றின் தொடர்பில் அண்மை ஆண்டுகளில் பலர் தங்களிடம் புகார் கொடுத்ததாக திரு கோ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“புதிய தளம் அவற்றுக்குத் தீர்வாக அமைகிறது என்று நான் நினைக்கிறேன்,” என்றும் திரு கோ குறிப்பிட்டார்.
புதிய தளத்தில் இடம்பெறும் குலுக்கல் முறையின்படி ஒரு மையத்துக்கோ திட்டத்துக்கோ 14 நாள்களுக்கு முன்பிருந்தே பதிவுசெய்யலாம். 24 மணிநேரத்துக்கும் பதிவு முறை திறந்திருக்கும்.
தாங்கள் விரும்பிய நேரத்தில் பதிவுசெய்யும் வசதிகளைப் பயன்படுத்தும் வாய்ப்பை அனைவருக்கும் வழங்குவது இதன் நோக்கமாகும் என்று ஸ்போர்ட்எஸ்ஜி தெரிவித்தது. மேலும், பதிவு நேரத்தை நழுவவிடும் கவலையின்றி இதுகுறித்து முடிவெடுக்கப் பயனர்களுக்குப் போதுமான நேரம் இருக்கும் என்றும் அது சுட்டியது.

