தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாவிட்டால் பின்தங்க நேரிடும்: அமைச்சர் டான் சீ லெங்

2 mins read
b505cae5-e9c3-43e9-925d-d28cbd749292
மனிதவள அமைச்சர் டான் சீ லெங், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 53வது செயிண்ட் கேலன் கருத்தரங்கில் உரையாற்றினார். - படம்: வெய் சியான் சுவா

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தொழில்நுட்பத் திறன்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள், அந்தத் திறன் இல்லாதோரைப் புறந்தள்ளி முன்னேறுவர் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான அவர், மே 2ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 53வது செயிண்ட் கேலன் கருத்தரங்கில் உரையாற்றினார்.

சிங்கப்பூர் அதனால்தான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் துறையை மேம்படுத்தவும் மக்களுக்குத் தேவையான திறன்களைக் கற்றுத்தரவும் உதவும் தேசிய அளவிலான ஏஐ உத்தியில் $1 பில்லியனை முதலீடு செய்கிறது என்று அமைச்சர் கூறினார்.

“மக்கள்தான் எங்கள் ஒரே வளம். சிங்கப்பூரின் ஊழியரணியை எடுத்துக்கொண்டால் அதன் ஒவ்வொரு நிலையிலும் இருப்போருக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய முயல்கிறோம்,” என்றார் டாக்டர் டான்.

அனைவரும் சமமான திறன்களைக் கைக்கொள்வர் என்று உறுதிகூற இயலாது. இருந்தபோதும் தொடக்கத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்கிறோம் என்றார் அவர்.

அமைச்சர் உரையாற்றிய கருத்தரங்கை, செயிண்ட் கேலன் பல்கலைக்கழகம் ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் நடத்துகிறது. பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பொருளியல், அரசியல், சமூக மேம்பாடு குறித்து விவாதிப்பர்.

மக்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் திறன்களைக் கற்பிக்கும் நிலையங்களை நிறுவுவதன் தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கம் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதாக டாக்டர் டான் கூறினார்.

பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிலையங்களில் ‘ஏஐ’ கற்பிக்கும் பாடத்திட்டங்கள் உள்ளன என்றார் அவர்.

மக்களிடம் முதலீடு செய்வதன் மூலம் சிங்கப்பூரின் மனிதவளப் பற்றாக்குறைக்குத் தீர்வுகாணும் பெருந்திட்டத்தின் அங்கங்களாக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்