அமெரிக்க நிதி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் அடுத்த வாரம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா வரவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரான் மற்றும் ரஷ்யா மீதான வர்த்தகத் தடைகளை மேலும் கடுமையாக்க அந்த அமெரிக்க அதிகாரி பயணம் மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் நிதி புலனாய்வுகளை வழிநடத்தும் பிரையன் நெல்சன் சிங்கப்பூர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகம் தொடர்பாக சிங்கப்பூருடன் பேசலாம் என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.
அண்மைக்காலமாக மலேசியாவின் நிதி கட்டமைப்புகளில் இருந்து ஹமாஸ் உள்ளிட்ட ஈரானைச் சார்ந்த அமைப்புகளுக்கு பணம் அனுப்பும் நடவடிக்கைகள் அதிகமாகியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் ராய்ட்டர்சிடம் கூறியதாக அது தெரிவித்தது. அது குறித்து மலேசிய அரசாங்கத்திடம் அமெரிக்கா பேசலாம் என்றும் எண்ணப்படுகிறது.

