வாம்போ வீட்டில் தீ: ஒருவர் மரணம், இருவர் மீட்பு

வாம்போ வீட்டில் தீ: ஒருவர் மரணம், இருவர் மீட்பு

படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

06 May 2024 - 10:26 am

1 mins read

வாம்போ வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் மே 6ஆம் தேதி அதிகாலை தீச்சம்பவம் ஏற்பட்டது.

இதில் 60 வயது ஆடவர் ஒருவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் படுக்கையறையில் அவர் மாண்டு கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தீப்பற்றி எரிந்த வீட்டிலிருந்து இருவர் மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரும் சமையலறையை ஒட்டியிருந்த பயனீட்டு அறையிலிருந்து அதிகாரிகளால் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட இருவரும் பெண்கள். ஒருவருக்கு 60 வயது, இன்னொருவருக்கு 77 வயது.

அந்த இரு பெண்மணிகளும் மாண்டவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெங் சீ ஹாவ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

புளோக் 76 லோரோங் லிமாவ்வில் உள்ள ஒரு வீட்டில் தீ மூண்டதாக அதிகாலை 2.30 மணி அளவில் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.

அந்தக் குடியிருப்புக் கட்டடத்தின் ஆறாவது மாடியில் இருக்கும் அந்த வீட்டிற்குள் தீ கொழுந்துவிட்டு எரிந்ததாக அதிகாரிகள் கூறினர்.

தீயின் காரணமாக வீடு முழுவதும் சேதமடைந்தது.

மத்திய தீயணைப்பு நிலையம், பீஷான் தீயணைப்பு நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர்.

அந்தக் கட்டடத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்