தெங்கா ஆகாயப் படைத் தளத்தில் விபத்து நிகழ்ந்ததால் எஃப்-16 போர் விமானங்களின் பயிற்சிகளை சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அந்த ஆகாயப் படைத் தளத்தில் மே 8ஆம் தேதி அதன் விமானங்களில் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பயற்சிகள் ரத்து செய்யப்படுவதாகத் தற்காப்பு அமைச்சு புதன்கிழமை அன்று கூறியது.
எஃப்-16 பயிற்சிகள் மீண்டும் தொடங்குவது பாதுகாப்பானது என்பதை விசாரணை மூலம் தீர்மானிக்கப்படும் வரை பயிற்சிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
விபத்தில் சிக்கிய விமானத்தில் பிற்பகல் 12.35 மணியளவில் புறப்படும்போதே கோளாறு ஏற்பட்டது.
விமானம் நொறுங்கி விழுவதற்கு முன்பாக அதன் விமானி அவசரகால நடைமுறைகளைப் பின்பற்றி விமானத்திலிருந்து வெளியேறினார். அவருக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை.
“அவருக்கு நினைவிருந்தது, அவரால் நடக்க முடிந்தது, பேச முடிந்தது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்,” என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
விமானிக்கு முழு மருத்துவச் சோதனை செய்யப்பட்டதாக புதன்கிழமை பின்னேரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“விமானிக்கு 2,000 மணி நேரம் எஃப்-16 விமானத்தில் பறந்த அனுபவம் உள்ளது,” என்று அமைச்சு குறிப்பிட்டது.
வழக்கமான பயிற்சிக்காகத் தெங்கா ஆகாயப் படைத் தளத்தின் ஓடுதளத்திலிருந்து விமானம் மேலே கிளம்பியபோது விமானத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று விமானி விபத்து குறித்து கூறியுள்ளார்.
இந்நிலையில் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சு தெரிவித்தது.
இதற்கிடையே எஃப்-16 விமானங்களைத் தயாரிக்கும் லாக்ஹீட் மார்டின், விபத்து குறித்து அறிந்திருப்பதாக சிஎன்ஏவிடம் தெரிவித்தது.
“விமானி பாதுகாப்பாகத் தப்பிய தகவல்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். தேவை ஏற்பட்டால் எங்களுடைய ஆதரவை வழங்கத் தயாராக இருக்கிறோம்,” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

