காவல்துறை 1,100 மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 300க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடத்துகிறது.
இந்தச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் $9 மில்லியனுக்கு அதிகமான தொகையை இழந்ததாகக் கூறப்பட்டது.
ஏப்ரல் 26ஆம் தேதிக்கும் மே 9ஆம் தேதிக்கும் இடையே அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கை மேற்கொண்டதாகக் காவல்துறை மே 10ஆம் தேதி கூறியது.
அதில் மொத்தம் 319 பேர் பிடிபட்டனர். அவர்களில் 218 பேர் ஆண்கள்; 101 பேர் பெண்கள். அவர்கள் 16 வயதுக்கும் 77 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அனைவரும் விசாரணையில் ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நண்பர்களைப்போல் ஆள்மாறாட்டம் செய்தது, போலியான முதலீடுகள், இணையக் காதல் மோசடி, வேலைவாய்ப்பு மோசடி போன்றவற்றில் அவர்கள் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், உரிமமின்றி கட்டணச் சேவை வழங்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றத்துக்குப் பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ $500,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
உரிமமின்றி கட்டணச் சேவை வழங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ $125,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2023) 46,563 மோசடிச் சம்பவங்கள் பதிவாயின. 2016ஆம் ஆண்டு, மோசடிச் சம்பவங்கள் பற்றிய கணக்கெடுப்பு தொடங்கப்பட்டதிலிருந்து பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது. 2022ல் அந்த எண்ணிக்கை 31,728 இருந்தது.
2023ல் மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர் மொத்தம் $651.8 மில்லியனை இழந்தனர்.
வங்கிக் கணக்குகளையோ கைத்தொலைபேசி எண்ணையோ பயன்படுத்திக்கொள்ள யாரேனும் கேட்டால் அத்தகைய கோரிக்கைகளை நிராகரிக்கும்படிப் பொதுமக்களுக்குக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

