பாலின சமத்துவம் அதிகமாகவுள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூருக்கு எட்டாவது இடம்

1 mins read
2ff6704d-caf4-44f7-b4aa-f1f223b40aa9
சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசிகளான பெண்களில் 25 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டோரிடையே கடந்த பத்தாண்டுகளில் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாலின சமத்துவம் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் உலக அளவில் எட்டாவது இடத்தில் உள்ளது. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அது முதலிடத்தில் உள்ளது.

2024 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஐக்கிய நாட்டுப் பாலின சமத்துவமின்மைக் குறியீட்டுப் பட்டியலில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. உலகின் 166 நாடுகள் அந்தப் பட்டியலில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டு சிங்கப்பூர் அந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்தது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, மே 10ஆம் தேதி வெளியிட்ட, பெண்கள் முன்னேற்றம் தொடர்பான ஆண்டறிக்கையில் அது குறிப்பிடப்பட்டிருந்தது.

2022ஆம் ஆண்டு சிங்கப்பூர்ப் பெண்கள் முன்னேற்றம் மீதான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதன் பிறகு, அமைச்சு வெளியிட்ட அத்தகைய முதல் அறிக்கை அது.

வேலையிடத்திலும் தலைமைத்துவப் பதவிகளிலும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்ததன் மூலம் கடந்த சில ஆண்டுகளில் சிங்கப்பூரில் பாலினச் சமத்துவ நிலவரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஈராண்டுகளில் வேலையிடத்தில் சம வாய்ப்புகளை வழங்குதல், கூடுதலான பராமரிப்பாளர் ஆதரவு, வன்முறை, இணையத் துன்புறுத்துல் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்தல் போன்ற அம்சங்களில் கூடுதல் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசிகளான பெண்களில் 25 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டோரிடையே கடந்த பத்தாண்டுகளில் வேலைவாய்ப்பு விகிதம் 76.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதே வயதுடைய ஆண்களிடையே இந்த விகிதம் 89 விழுக்காடாக நிலையாக உள்ளது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேலைவாய்ப்பு இடைவெளி 12.4 விழுக்காட்டுப் புள்ளியாகக் குறைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்