‘இந்த விவகாரங்கள் எப்போதும் உணர்வுபூர்வமானவை’

முக்காடு அணிவது, ஆண்களுக்கு இடையிலான உறவு போன்ற உணர்வுபூர்வமான விவகாரங்கள் குறித்து பிரதமர் லீ

மக்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ளவும் தங்கள் வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு, நடைமுறைக்கு ஏற்ற ஏற்பாடுகளைச் செய்ய உதவும் வகையில் ‘முக்காடு’ அணிவது, ஆண்களுக்கு இடையிலான உறவு போன்ற உணர்வுப்பூர்வமான விவகாரங்களை சிங்கப்பூர் கையாண்டுள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டார்.

மே 15ஆம் தேதி துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் பிரதமர் பொறுப்பு ஒப்படைக்கப்படுவதற்கு முன்னதாக ஏப்ரல் 26, 28ஆம் தேதிகளில் அதிபர் மாளிகையில் இடம்பெற்ற விரிவான ஊடக நேர்காணலில் இனவாதம், சமூகப் பாதுகாப்புத் திட்டம் போன்ற விவகாரங்களையும் இதர விஷயங்களையும் அரசாங்கம் கையாள்வது குறித்து அவர் பேசினார்.

சில முக்கிய அம்சங்கள்

2021 ஏப்ரல் 10, சனிக்கிழமையன்று சிவில் சர்வீஸ் கிளப்பில் மலாய்/முஸ்லிம் சமூகத் தலைவர்களுடன் இடம்பெற்ற தலை முக்காடு குறித்த கலந்துரையாடல் அமர்வுக்குப் பிறகு பிரதமர் லீ சியன் லூங்கும் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சரான மசகோஸ் சுல்கிஃப்லியும் செய்தியாளர்களிடம் பேசினர். படம்: சாவ் பாவ்

தாதியரை தங்கள் சீருடைகளுடன் தலையங்கி அணிய அனுமதிப்பது, தண்டனைச் சட்டம் 377ஏ பிரிவை ரத்து செய்வது தவிர்த்து, 2001 செப்டம்பர் 11, தாக்குதல்களுக்குப் பிறகு ஜமா இஸ்லாமியா (ஜேஐ) குழுவால் ஏற்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் அரசாங்கம் கையாண்ட மற்றோர் உணர்வுபூர்வமான பிரச்சினை என்று பிரதமர் லீ மேற்கோள் காட்டினார்.

அரசாங்கம் பெரிய முடிவுகளை மேற்கொள்ளவில்லை என்றால், “அது நடக்காது, அல்லது அது மிகவும் குழப்பமான, சர்ச்சைக்குரிய வழியில் நடக்கும்”, என்றார் அவர்.

சிங்கப்பூரர்களிடையே சமூகப் பிணைப்பை வலுப்படுத்தும் அதேநேரத்தில், குடியேறிகள், வெளிநாட்டு ஊழியர்களை வரவேற்பதற்கும் இடையிலான உள்ளார்ந்த பதற்றங்களை நிர்வகிப்பது மிகவும் கடினமான விவகாரம், நீண்ட கால சவால் என்று பிரதமர் சுட்டினார்.

“சிங்கப்பூர் வளர வேண்டும் என்றால், கேக் சாப்பிடுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க கடுமையாக உழைத்து, அதில் பெரும்பகுதியை சாப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை. இது தொடர்ச்சியான, நீண்ட கால சவாலாகும்,” என்றார் அவர்.

வலுவான தேசிய அடையாளம்

சிங்கப்பூரின் தேசிய அடையாளம் இன்னும் வலுவாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை என்ற திரு லீ, தேசிய அடையாளத்தை வலுப்படுத்துவது கடின உழைப்பாகும். பரந்துபட்ட சமூகம் அவ்வப்போது வெவ்வேறு இனக்குழுக்களை வெவ்வேறு திசைகளில் இழுக்கும் என்றார்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தச் சவால்கள் இருந்துள்ளன. எதிர்காலத்தில் இது போன்ற சவால்கள் நிச்சயம் இருக்கும் என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.

சமூகப் பாதுகாப்புத் திட்டம்

என்டியுசி அரங்கில் 2005ல் காம்கேர் நிதியை தொடங்கி வைத்த பிரதமர் லீ சியன் லூங். The Straits Times

மேலும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயமாக மாறும் முயற்சியில் சிங்கப்பூர் ஒரு சமூக ஆதரவுக்கு அதிகம் செலவிடும் சமூகநல நாடாகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த திரு லீ, அப்படியானால், சில ஐரோப்பிய நாடுகளைப் போல நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 விழுக்காட்டை அவை அதற்கு செலவிடும். அதில் 40 விழுக்காட்டை வரி மூலம் அந்த நாடுகள் திரட்டும் என்றார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 விழுக்காடு வரியை சிங்கப்பூர் வசூலிப்பதில்லை. சமூக மற்றும் இதர அரசாங்கத் திட்டங்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 விழுக்காட்டைச் செலவிடுவதில்லை. குடியரசு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 15 விழுக்காட்டை வரியாக வசூலிக்கிறது. கிட்டத்தட்ட 18 முதல் 19 விழுக்காடு வரை அதற்கு செலவிடுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் பொருள் சேவை வரி 9 விழுக்காடாக உள்ளது, இது மற்ற வளர்ந்த, சமூகநல நாடுகளில் விதிக்கப்படும் 20 அல்லது 25 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் வருமானம், செல்வம், பெட்ரோல் போன்ற பொருள்கள் மீதான பிற வரிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்று பிரதமர் லீ கூறினார்.

சமூக நன்மைகள் அல்லது பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டுமானால், வருவாயை உயர்த்த அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட வேண்டும், என்று அவர் மேலும் கூறினார்.

எதிர்க்கட்சியினர் நிதியிருப்புகளிலிருந்து “சற்று அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லலாம் என்றாலும், சமூகநல மாதிரி அரசாங்கத்துக்குத் தேவைப்படுகின்ற செலவின் அளவு “எவ்வளவு அதிகமாக இருந்தாலும், இருப்பு மிக விரைவில் கரைந்துவிடும், அது சரி வராது,” என்று கூறினார்.

குறைந்த வரி, குறைவான நலன்களைக் கோரும் ஒரு தொகுதி அல்லது அரசியல் கட்சி இல்லாத நிலையில், எத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டம் அவசியம் என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

காம்கேர், வேலைநலன், படிப்படியான சம்பள உயர்வு முறை போன்ற திட்டங்களை மேற்கோள் காட்டிய அவர், கடந்த 20 ஆண்டுகளில் சிறந்த சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்ற நிலையை நோக்கி சிங்கப்பூர் வெகுதூரம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“இது மிகவும் கணிசமானது. நிச்சயமாக, மக்கள் எப்போதும் இன்னும் அதிகமாகச் செய்யுங்கள் என்று கேட்பார்கள். நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவோம்.

“எனினும், அதிகம் செய்வது சிங்கப்பூரின் போட்டித்தன்மையையும் பொருளியல் ஆற்றலையும் பலவீனப்படுத்தும்,” என்றார் அவர்.

“சிங்கப்பூரர்கள் கடுமையாக உழைத்து விவேகத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நல்ல பலன்கிடைத்தால் அனைவரும் பயன்பெறலாம்,” என்றார் திரு லீ.

இஸ்ரேல் ஹமாஸ் மோதல்

சிங்கப்பூரின் மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் விமானம். படம்: தற்காப்பு அமைச்சு

காசாவில் நடக்கும் மோதல் குறித்து சிங்கப்பூர் முஸ்லிம்கள் ஏன் மிகவும் வேதனைப்படுகிறார்கள் என்பதை தான் முழுமையாகப் புரிந்துகொண்டதாகப் பிரதமர் லீ கூறினார்.

“இது நினைத்துப் பார்க்க முடியாதது. இது மனிதத் தன்மையற்றது. ஆனால் இந்த உணர்வில் சமய அம்சமும் உள்ளது,” என்று அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டம் அல்லது கொடிகளை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, உதவ நடைமுறை வழிகள் உள்ளன என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் நன்கொடைகளை திரட்டியுள்ளது, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் எகிப்து சென்று உதவிகளை வழங்கியது. மேலும், உணவு, மருத்துவப் பொருள்களை சேகரித்தும் வாங்கியும் சிங்கப்பூர் ஆகாயப்படையின் சி-130 விமானத்திலிருந்து காசாவின் வான்வழியாக இறக்கிவிட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் போர் நிறுத்தத் தீர்மானங்களுக்கு சிங்கப்பூர் மீண்டும் மீண்டும் வாக்களித்தது. சிங்கப்பூரின் நிலைப்பாடு, சிங்கப்பூர் எதைக் கண்டிக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த நாடாளுமன்ற மற்றும் அரசாங்க அறிக்கைகளும் வெளியிடப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.

தனிப்பட்ட கருத்துக்கள் வேறுபட்டாலும், நாடு ஒன்றாக இருப்பதன் அவசியத்தையும் தேசிய நிலைப்பாட்டையும் சிங்கப்பூரர்கள், முஸ்லிமோ முஸ்லிம் அல்லாதவரோ, புரிந்துகொள்வார்கள் என்று தாம் நம்புவதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்.

இனவாதம்

ஜாலான் காயுவில் 2008ஆம் ஆண்டு இனநல்லிணக்க கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் லீ சியன் லூங், சிறுவர்களுடன் உரையாடினார். கோப்புப் படம்: ஸ்ட்ரெட்ஸ் டைம்ஸ்

இனம், மொழி அல்லது சமயம் எதுவாக இருந்தாலும் ஒரே மக்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை இலட்சியத்துடன் சிங்கப்பூர் தொடங்கியது.

நாடு அந்த திசையில் வெகுதூரம் வந்துள்ளது, பெரும்பாலான நாடுகளைவிட இனவாதம் இங்கு குறைவாகவே காணப்படுகிறது. “அதை மேலும் மேம்படுத்த சிங்கப்பூர் பாடுபடும்,” என்று பிரதமர் லீ கூறினார்.

பண்பாடு, மரபுடைமை, சமயங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அதே நேரத்தில் மாறுபட்டே இருக்கப்போகும் வெவ்வேறு மனிதக் குழுக்களுக்கு இடையே முற்றிலும் பாரபட்சங்களை முற்றும் இல்லாமல் ஆக்குவது மிகவும் கடினமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இனவாதத்தைக் குறைக்க அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கும் என்று பிரதமர் லீ கூறினார். இது செயல்பாட்டில் இருக்கும் பணியிட பாகுபாடு சட்டத்தை மேற்கோள் காட்டுகிறது.

எப்போதாவது ஒரு முறை யாரேனும் மூர்க்கத்தனமாக ஏதாவது சொல்லி எல்லோரையும் அலைக்கழிக்கும் சம்பவங்கள் நடக்கும். நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

“நீங்கள் எதிர்வினையாற்ற வேண்டும்-ஒன்று தண்டனையைச் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டும், அல்லது குறைந்தபட்சம் கடுமையான மறுப்பை வெளிப்படுத்த வேண்டும், தலைவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், ” என்றார் அவர்.

ஆனால் இந்த விஷயங்களில் தீர்ப்பும் முன்னோக்கும் தேவை, ஒரு சிறிய சம்பவத்திற்கு மிகைப்படுத்துவது புத்திசாலித்தனமற்றதாக இருக்கும், ஏனெனில் இது அனைவரையும் மிகைப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும்.

சமூக ஊடகம்

கடந்த 2011ல், மசெகவின் ஃபேஸ்புக் பக்கத்தில், ஃபேஸ்புக் பயனாளர்களுடன் முதல் முறையாக உரையாடிய பிரதமர் லீ சியன் லூங். கோப்புப் படம்: ஸ்ட்ரெட்ஸ் டைம்ஸ்

இளையர்களிடையே அரசியலில் ஆர்வத்தை வளர்ப்பதற்கான ஒரு வழியாக சமூக ஊடகம் உள்ளது என்று ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை வைத்திருக்கும் பிரதமர் லீ கூறினார்.

சமூக ஊடகம் வெவ்வேறு தரப்பினரை எட்டுகிறது என்றார் அவர்.

நெருக்கடி காலத்தில், மக்கள் சமூக ஊடகப் பதிவுகளில் கவனம் செலுத்துகிறார்கள் என்ற அவர், கொவிட்-19 தொற்றுநோய்களின்போது தமது பதிவுகள் எவ்வாறு பரவலாகப் பார்க்கப்பட்டன என்பதைச் சுட்டினார். என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிய விரும்பினர் என்றார் அவர்.

பதவி விலகிய பின்னரும் சமூக ஊடகத்தில் தொடர்ந்து பதிவிடப் போவதாக அவர் கூறினார்.

புதிய தலைவர்களும் பிரதமரும் சமூக ஊடகங்களைப் பார்ப்பதை அதிகரிப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

துனைப் பிரதமர் வோங் பற்றிக் குறிப்பிட்ட திரு லீ, “அவர் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவரது கிதார் வாசிப்பு திறன் மோசமாக இல்லை,” என்றார் சிரித்தபடி.

லாரன்ஸ் வோங், சான் சுன் சிங், டெஸ்மண்ட் லீ, ஓங் யீ கங் போன்ற அமைச்சர்கள் டிக்டாக் கணக்குகளை வைத்திருப்பதாகச் சொன்ன பிரதமர் லீ, தாமும் அதைப் பரிசீலித்ததாகவும், ஆனால் ஏற்கெனவே உள்ளவற்றில் சொல்வதற்கு அப்பால் அதில் ஒன்றும் இல்லை என்பதால் டிக்டாக் கணக்கு தொடங்கும் எண்ணத்தைக் கைவிட்டதாகச் சொன்னார்.

சமூக ஊடகத்தில் தங்கள் கண்ணியத்தைக் கட்டிக்காக்க வேண்டும் என்பது இளைய அமைச்சர்களுக்கு அவர் கூறும் அறிவுரை.

“பைத்தியக்காரத்தனமாக எதையும் செய்யாதீர்கள். பார்வைகளை ஈர்ப்பது ஒன்று, மரியாதையைப் பெறுவது மற்றொன்று,” என்றார் அவர். “வேடிக்கையாகவும் நகைச்சுவை மிக்கவராகவும் இருப்பதாக மக்கள் நினைத்தால் அது நல்லது, ஆனால் உங்கள் வேலையில் நீங்கள் திறமையானவர் என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும்,” என்றார் பிரதமர் லீ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!