வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் செல்லப் பிராணிகளாகப் பூனைகளை வைத்திருக்க விரும்புவோருக்கான புதிய கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.
பூனை உரிமத் திட்டம் செப்டம்பர் 1லிருந்து நடப்புக்கு வருகிறது.
அதன்படி வீட்டில் உள்ள பூனைகள் அனைத்திற்கும் உரிமம் பெற்று நுண்சில்லு விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய உரிமையாளர்களுக்கு இரண்டு ஆண்டு கால அவகாசம் வழங்கப்படும்.
தேசிய பூங்காக் கழகத்தின் விலங்கு, விலங்கு மருத்துவச் சேவையின்கீழ் ஒவ்வொரு வீவக வீட்டில் அதிகபட்சம் இரண்டு பூனைகள் மட்டுமே வைத்திருக்கலாம். ஒவ்வொரு தனியார் வீட்டிலும் அதிகபட்சம் மூன்று பூனைகள் வைத்திருக்கலாம். செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் எல்லாப் பூனைகளுக்கும் உரிமம் பெற்றிருக்க வேண்டும், நுண்சில்லு பொருத்தியிருக்க வேண்டும்.
“வீவக வீடுகளிலும் தனியார் வீடுகளிலும் அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் பூனைகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள், இந்த இரண்டு ஆண்டு கால அவகாசத்துக்குள் அவர்கள் ஏற்கெனவே வளர்த்து வரும் அனைத்துப் பூனைகளுக்கும் உரிமம் பெற்று நுண்சில்லு பொருத்திவிட்டால் அவற்றை வைத்துக்கொள்ளலாம்,” என்று விலங்கு, விலங்கு மருத்துவச் சேவை தெரிவித்தது.
விலங்கு, விலங்கு மருத்துவச் சேவையின் செல்லப் பிராணிகள் உரிம விண்ணப்பம் இணையவாசல் மூலம் பூனைகளுக்கான உரிமத்துக்கு செப்டம்பர் 1லிருந்து விண்ணப்பம் செய்யலாம்.
முதல்முறை விண்ணப்பம் செய்பவர்கள் இணையம் மூலம் உரிமையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சியை செய்து முடிக்க வேண்டும். இந்த இலவசப் பயிற்சியை அவர்கள் ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டும்.
அதில் அடிப்படை செல்லப் பிராணி வளர்ப்புத் திறன்களும் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர் என்கிற முறையில் பொறுப்புடன் நடந்துகொள்ளும் முறையும் சொல்லிக்கொடுக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இந்த இரண்டு ஆண்டு கால அவகாசத்திற்குள் விண்ணப்பம் செய்தால் (2024ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை) உரிமங்கள் இலவசமாக வழங்கப்படும்.
அதனை அடுத்து, கருத்தடை செய்யப்பட்ட பூனைக்கான ஓராண்டு உரிமத்துக்காக $15 செலுத்த வேண்டும். கருத்தடை செய்யப்படாத பூனைக்கான உரிமத்துக்கு $90 செலுத்த வேண்டும். செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கும் இதே தொகை வசூலிக்கப்படுகிறது.
பூனைகள் அளவுக்கு அதிகமான குட்டி போடுவதைத் தவிர்க்க அவற்றுக்குக் கருத்தடைச் சிகிச்சை செய்ய உரிமையாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.