மருத்துவ விடுப்புக்கான சான்றிதழ் வழங்குவதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்குவதன் தொடர்பில் மருத்துவர்களிடம் கருத்து கேட்பதாகச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
பள்ளிக்கோ வேலைக்கோ செல்ல விருப்பமில்லாத பலர், மருத்துவரிடம் சென்று அச்சான்றிதழைப் பெறுவதாகவும், குறிப்பாக தொலைமருத்துவச் சேவையின் (காணொளிச் சந்திப்பு) மூலம் அவ்வாறு அவர்கள் கோருவதற்கு மருத்துவர்களும் இணங்குவதாகவும் தெரியவந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
பல்வேறு நிறுவனங்களும் அரசாங்க அமைப்புகளும் அவ்வாறு தெரிவித்திருப்பதாக அது சொன்னது.
மருத்துவர்களின் கடமையை நினைவூட்டி ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருப்பதாக அமைச்சு தெரிவித்தது.
அதில், மருத்துவச் சான்றிதழ் வழங்குவதற்கான நிபந்தனைகளைக் கடுமையாக்கும் வகையில் சுகாதாரப் பராமரிப்புச் சேவைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது பற்றி மருத்துவர்களிடம் அமைச்சு கருத்து கேட்டுள்ளது.
கூடுதலானோர் மருத்துவ விடுப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்து அமைச்சிடம் புகாரளித்த அமைப்புகள், மருத்துவம் சாராத காரணங்களுக்கும் மருத்துவச் சான்றிதழ்களை ஊழியர்கள் சமர்ப்பிப்பதாகக் கூறின.
“பள்ளிக்கோ வேலைக்கோ செல்ல விரும்பாமல் மருத்துவச் சான்றிதழ் கேட்டவர்களுக்கு அது வழங்கப்பட்டுள்ளது. அதே நோயாளிகளுக்கு அவை மீண்டும் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. உண்மையிலேயே அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால் கூடுதல் மருத்துவப் பரிசோதனைகளுக்கு அவர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும். கடமையிலிருந்து தப்பித்துக்கொள்ள மருத்துவ விடுப்பு உரிமையைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு இது,” என்று அமைச்சு கூறியது.
நோயாளி கேட்டுக்கொண்டதால் மட்டுமே இத்தகைய மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகக் கூறிய அமைச்சு, சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின் நெறிமுறைக் கோட்பாடு, வழிகாட்டிக் குறிப்புகளை அதன் சுற்றறிக்கையில் மேற்கோள்காட்டியுள்ளது. ‘முறையான மருத்துவ மதிப்பீட்டுக்குப் பிறகே நோயாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருப்பதை அமைச்சு சுட்டியது.
தொடர்புடைய செய்திகள்
இதன் தொடர்பில் கண்காணிப்புச் சோதனைகளையும் தணிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதாக அமைச்சு கூறியது. தொலைமருத்துவச் சேவை வாயிலாக மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதற்கான நடைமுறை, கொள்கைகள் குறித்து அமைச்சு விளக்கம் கேட்கக்கூடும்.
மருத்துவர்கள் யாரேனும் சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப நடக்கத் தவறியது தெரியவந்தால் நிபுணத்துவக் கண்காணிப்பு அமைப்பின் கவனத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுவார்கள். விதிமீறல் உறுதிப்படுத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படலாம்.