சிங்கப்பூரின் இரண்டு சொகுசுக் கப்பல் நிலையங்கள் வரும் ஆண்டுகளில் ஒன்றிணைக்கப்படும் என்று அண்மையில் வெளியான செய்தி உண்மையல்ல என்று நகரச் சீரமைப்பு ஆணையமும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் திங்கட்கிழமை (மே 13) தெரிவித்துள்ளன.
அச்செய்தி ‘கிரேட்டர் சதர்ன் வாட்டர்ஃபிரன்ட்’ நீர்முகப்பின் ஓர் அங்கமாக, தொடர்ச்சியான உல்லாச நடைபாதையை அமைக்க சொகுசுக் கப்பல் நிலையங்கள் ஒன்றிணைப்பு உதவுவதாகவும் அந்த நிலையங்களின் ஒருங்கிணைப்பை ‘சிறிய நடவடிக்கை’ என்று நகர மறுசீரமைப்பு ஆணையத் தலைமை நிர்வாகி லிம் எங் ஹுவீ கூறியதாகவும் தவறுதலாக குறிப்பிட்டது.
அத்துடன் சொகுசுக் கப்பல் நிலையங்கள் ஒன்றிணைப்பு மூலம் நீர்முகப்பு முழுவதையும் லேப்ரடார் இயற்கைப் பூங்காவிலிருந்து கெப்பல்-தஞ்சோங் பகார், மரினா பே, வருங்காலத்தில் அமைக்கப்படவிருக்கும் லாங் தீவு வரையிலான பகுதிகளை இணைக்க இயலும் என்று திரு லிம் கூறியாதாகவும் செய்தியில் எழுதப்பட்டிருந்தது.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் 50ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் திரு லிம் அந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டதாகவும் நகரை மறுவடிவமைத்தல் போன்ற முக்கிய நடவடிக்கைகளுக்குப் பெரிய அளவிலான நிலப்பகுதி தேவைப்படும் என்பதை திரு லீம் சுட்டியதாகவும் அச்செய்தி குறிப்பிட்டது.
சிங்கப்பூர் பல காலமாகவே அதன் நிலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நிலமீட்பு நடவடிக்கைகளைச் சார்ந்துள்ளது. கிட்டத்தட்ட அதன் கால்வாசி நிலப்பகுதி, நிலமீட்பு நடவடிக்கையின் வாயிலாக உருவானது என்றார் திரு லிம்.
“சிறிய நாடான சிங்கப்பூருக்கு, உலகின் இதர பகுதிகளுடன் கடல் வழியாகவும் வான்வழியாகவும் தொடர்புகொள்ளும் திறன் மிகவும் முக்கியம்,” என்று கூறிய அவர், சிங்கப்பூர் உலகின் மற்ற நாடுகளுடன் கடல்வழித் தொடர்புகளைத் தக்கவைத்துக்கொள்ள, கடல்துறை நடவடிக்கைகளுக்குப் பெரிய அளவிலான கடற்பரப்பு தேவை என்றார்.
இப்போதைக்கு ஈஸ்ட் கோஸ்ட்டில் அமையவிருக்கும் லாங் தீவுத் திட்டத்திற்கு, 10 சதுர கிலோமீட்டர் அளவிலான கடற்பரப்பு பயன்படுத்தப்படும் என்றார் அவர். தற்போது பெரும்பாலான திட்டமிடல்கள் அறிவியல் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் திரு லிம் கூறினார்.
செய்தி திருத்தம்: இந்த செய்தியின் முந்தைய பதிப்பில் சிங்கப்பூரின் இரண்டு சொகுசுக் கப்பல் நிலையங்கள் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த தகவல் தவறு. தவறுக்கு மன்னிக்கவும்.