புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான 56 வயது முரளி பிள்ளை, ஜூலை 1ஆம் தேதி முதல் சட்ட, போக்குவரத்து துணை அமைச்சராகிறார்.
மே 13ஆம் தேதி இஸ்தானாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்த புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.
ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஷான் ஹுவாங், 42, கல்வி , நிதி அமைச்சுகளுக்கான ஆகியவற்றுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மூத்த நாடாளுமன்றச் செயலாளர்கள் மே 24ஆம் தேதியும் திரு முரளி ஜூலை 1ஆம் தேதியும் பதவியேற்பர்.
மூத்த அமைச்சர்கள் சிலர் ஓய்வு பெறுவதால் தனது அணியைப் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார். புதியவர்களைக் கொண்டு வருவதோடு, ஆற்றல், திறமை உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதன் மூலமும் அணியை வலுப்படுத்தப் போவதாக திரு முரளி, திரு ஹுவாங் ஆகியோரை மேற்கோள் காட்டி அவர் கூறினார்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திரு முரளி பிள்ளை, புக்கிட் பாத்தோக் தனித்தொகுதிக்குச் சேவையாற்றுகிறார்.
2018ஆம் ஆண்டின் அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, உள்துறை, சட்ட அமைச்சுகளுக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
பொது மனுக்கள் குழு உறுப்பினராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
1996ஆம் ஆண்டு முதல் தனியார் துறையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த அவர், 2020ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞர் ஆனார்.
வழக்கறிஞர் ஆவதற்கு முன்னர், திரு முரளி பிள்ளை சிங்கப்பூர் காவல்துறையில் மூத்த அதிகாரியாக பணியாற்றினார்.
புதிய பொறுப்பு பற்றிக் கருத்துரைத்த திரு முரளி பிள்ளை, “கடந்த 28 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றும் நான், புதிய பொறுப்பை ஏற்க, பழகிய தொழிலில் இருந்து வெளியே வருகிறேன். எனினும், எனது அமைச்சர்களையும் துணைப் பிரதமர் வோங்கையும் ஆதரிக்க என்னால் ஆனவரையில் முயற்சியை மேற்கொள்வதிலும், கடுமையாக உழைப்பதிலும் உறுதியாக இருக்கிறேன்,” என்று கூறினார்.