வெற்றிபெறுவதற்கான பல்வேறு பாதைகளை அரவணைக்கும் இடமாக சிங்கப்பூர் திகழ வேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் விரும்புகிறார்.
அனைத்துத் தரப்பு மக்களுக்கும், அவர்கள் தொடர்ச்சியாக வேலை செய்யும் பட்சத்தில், வீடு, கல்வி, சுகாதாரம், ஓய்வூதியத் தேவைகள் போன்ற அடிப்படைத் தேவைகள் உறுதியளிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் புதன்கிழமை (மே 15) பதவியேற்கும் திரு லாரன்ஸ் வோங், சிங்கப்பூரை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கான சிறந்த வழியைக் கருத்தில்கொள்ளும்போது, சமூகத்தின் சூழ்நிலைகள், தேவைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவை மாறும்போது அடிப்படை அனுமானங்களை மறுபரிசீலனை செய்ய நாடு தயாராக உள்ளது என்று கூறினார்.
ஊடகங்களுக்கு மே 10ஆம் தேதி அளித்த ஒரு மணி நேர நேர்காணலில், அவர் தமது நிர்வாக அணுகுமுறையையும் சிங்கப்பூருக்கான தமது இலக்குகளையும் கோடிட்டுக் காட்டினார்.
“வெவ்வேறு சூழ்நிலைகள், வெவ்வேறு சமூக எதிர்பார்ப்புகள், தேவைகளின் அடிப்படையில் சிங்கப்பூர் அதன் அனுமானங்கள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்யத் தயாராக உள்ளது. மாறுபட்டுச் செயலாற்றுவது குறித்து ஆராயத் தயாராக உள்ளது,” என்றார் திரு வோங்.
‘முன்னேறும் சிங்கப்பூர்’ கலந்துரையாடல் (ஃபார்வர்ட் சிங்கப்பூர்) திட்டத்துடன் இந்தச் செயல்முறை தொடங்கியது என்று மக்கள் செயல் கட்சியின் (மசெக) நான்காம் தலைமுறைத் தலைமைக் குழுவுடன் இணைந்து சமூகத் தொடர்பைப் புதுப்பிக்கும் வகையில் இந்தத் திட்டத்தைத் தொடங்கிய துணைப் பிரதமர் வோங் கூறினார்.
எடுத்துக்காட்டாக, சிங்கப்பூர் பொது வீடமைப்பு, நீடித்த நிலைத்தன்மை போன்றவற்றுக்கான அதன் வரையறையைப் புதுப்பித்தது. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தை மேம்படுத்தியுள்ளது.
அரசாங்கம் விரைவில் அறிவிக்கவுள்ள வேலையில்லாதோருக்கான நலத்திட்டமானது, முன்னர் சிங்கப்பூர் செய்யாது என்று சொன்ன ஒன்று என்றார் திரு வோங்.
தொடர்புடைய செய்திகள்
“தற்போது பல்வேறு சூழ்நிலைகளில், பொருளியல் சூழல் மிகவும் நிலையற்றதாக இருக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு, மாற்றத்தின் வேகம் விரைவானதாக இருக்கும் என்பதையும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொடர்வதால் வேலைகள் மேலும் மேலும் இடையூறுகளுக்கு உள்ளாகும் என்பதையும் உணர்ந்து, இத்தகைய ஆதரவுத் திட்டம் அவசியம் என்று அரசாங்கம் உணர்கிறது,” என்றார் அவர்.
இந்த அமைப்புமுறை, சிங்கப்பூரர்கள் பின்னடைவுகளில் இருந்து வலுவாக மீண்டு வர முடியும் என்று உறுதியளிக்க வேண்டும் என்றார் அவர்.
“இந்த உத்தரவாதமும் ஆதரவும் அரசாங்கத்தால் மட்டுமின்றி, சமுதாயத்தில் உள்ள அனைவராலும் வழங்கப்பட வேண்டும்,” என்றார் துணைப் பிரதமர் வோங்.
“சுவிஸ் வாழ்க்கைத் தரத்திற்கு” அப்பால்
பொருளியல் வளர்ச்சியைப் பொறுத்தவரை, வீடமைப்பு, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து போன்ற துறைகளில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பதுடன் உயர்ந்த மேம்பாட்டையும் கொண்டுள்ளது என்று நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் கூறினார்.
முன்னாள் பிரதமர் கோ சோக் டோங் 1984ல் “சுவிஸ் வாழ்க்கைத் தரத்தை” சிங்கப்பூரர்கள் அடைய வேண்டிய இலக்காகக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்ததை திரு வோங் சுட்டினார்.
இன்று, இதுபோன்ற எந்த ஓர் அளவுகோலையும் அடையாளம் காண்பது மிகவும் கடினம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
முன்னோக்கிச் செல்வது என்பதில், சிங்கப்பூரர்களின் கூட்டு ஆற்றலை ஈடுபடுத்துவதும் அடங்கும் என்றார் திரு வோங்.
பகிரப்பட்ட ஒருமித்த கருத்தை உருவாக்குதல்
மாறுபட்ட கருத்துகளுக்கிடையே பகிரப்பட்ட ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் அரசாங்கத்துக்கு உள்ள இரு பங்குகளைத் துணைப் பிரதமர் வோங் முன்வைத்தார்.
சில வேளைகளில், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் கருத்துகளை அறிந்த பின்னர், அவை பிரபலமற்றவை என்று தெரிந்தாலும், கட்டாயமானவை, முக்கியமானவை என்று நம்பும் கொள்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
“அத்தகைய சந்தர்ப்பங்களில், அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவு முக்கியமானது என்று அரசாங்கம் கருதுவதற்கான காரணத்தை பொதுமக்களுக்கு விளக்கி, அவர்களை ஈடுபடுத்த வேண்டும். சிங்கப்பூரர்கள் அதை ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும் என்று நம்புகிறோம்.
முரண்பாடான கருத்துகளைக் கொண்ட குழுக்களை உள்ளடக்கிய, குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 377A பிரிவை ரத்து செய்வது, வேலையிடத்தில் தாதியர் தலையங்கி அணிய அனுமதிப்பது போன்ற உணர்வுபூர்வமான விஷயங்களில் அரசாங்கம் முன்னிலை எடுக்க விரும்புவதில்லை. ஆனால் சமூக நெறிமுறைகள் இயல்பாக மாற்றம் காண அனுமதிக்கலாம்.
இதில் அரசாங்கத்தின் பங்கு “உரையாடல்களை வழிநடத்துபவர், கேட்பவர், நேர்மையான இடைத்தரகராக இருப்பது,” என்று திரு வோங் குறிப்பிட்டார்.
“வெவ்வேறு குழுக்களை ஒன்றுசேர்ப்பதற்கும், ஒருவரையொருவர் ஈடுபடுத்துவதற்கும், ஒருவருக்கொருவர் கருத்துகளை செவிமடுப்பதற்கும் விட்டுக்கொடுப்பதற்குமான வழிகளைக் காண்கிறோம். அடுத்து, சமூகத்தைப் பிளவுபடுத்தாமல் சிங்கப்பூர் முன்னேற சிறந்த வழி எது என்பதைச் சிந்திக்கிறோம்.”
பரிணமித்து வரும் சிங்கப்பூர் அடையாளத்தைப் பற்றிக் குறிப்பிட்ட துணைப் பிரதமர், ஒவ்வொரு சமூகமும் முக்கியமானதாக உணரப்படுகிறது, அதன் பழக்கவழக்கங்களைத் தொடர முடிகிறது என்றபோதும், பொதுவான நிலையைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
வெளிநாடுகளில் உள்ள சமூகங்களுடன் ஆழமான மரபுவழி அல்லது பண்பாட்டு இணைப்புகள் மூலம் பல்வேறு பிரிவு மக்களைப் பாதிக்கவல்ல வெளிப்புற சக்திகளால் சிங்கப்பூர் எப்போதும் எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடும் என்றும் அவர் கூறினார்.
“அந்தத் தொடர்புகளைத் தக்கவைத்திருக்கும் அதேநேரத்தில், முதலில் நாம் சிங்கப்பூரர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்,” என்றார் திரு வோங்.
“மேலும் அந்தத் தொடர்புகளை வைத்திருக்கும் அதேநேரத்தில், சிங்கப்பூர் அடையாளத்தை வலுப்படுத்தவும், சிங்கப்பூரர்களாக நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் பொதுவான அடையாளத்தை விரிவாக்கவும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்,” என்றார் அவர்.
சிங்கப்பூரின் அணுகுமுறை தேசிய நலன்களால் வழிநடத்தப்படுகிறது
சிங்கப்பூரின் தலைமைத்துவம மாற்றம், பரந்த உலகில் பெரும் மாற்றங்களுக்கிடையே இடம்பெறுகிறது.
“உலகம் மாறுகிறது. இது ஒரு புதிய உலக ஒழுங்காக இருக்கும். மிகவும் குழப்பமானதாகவும் கணிக்க முடியாததாகவும் இருக்கும். உலகமே ஒரு செயல்பாட்டில் உள்ளது,” என்று கூறினார் துணைப் பிரதமர் வோங்.
சிங்கப்பூரின் அணுகுமுறை அதன் தேசிய நலன்கள் சார்ந்ததாக இருக்கும். நிலையான, கொள்கை ரீதியான வழியில் சிங்கப்பூர் செயல்படும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார். சிங்கப்பூர் அவ்வப்போது சில நாடுகள் விரும்பாதவற்றைச் சொல்லும் அல்லது செய்யும்.
“அது ஒருநாள் சீனாவாக இருக்கலாம், இன்னொரு நாள் அமெரிக்காவாக இருக்கலாம். இரண்டுக்கும் இடையில் சமநிலையைக் காண்பதல்ல சிங்கப்பூரின் வேலை,” என்றார் அவர்.
“எப்படியாவது ஓரளவு சமநிலையை காண, ஒருநாள் ஒரு நாட்டிற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்தால், அடுத்த நாள் மற்ற நாட்டிற்குச் சொல்ல அல்லது செய்ய மற்றொன்றைக் கண்டுபிடிக்க வேண்டும். அது சிங்கப்பூரின் அணுகுமுறை அல்ல.”
உலகப் பொருளியலின் ஈர்ப்பு விசையின் மையமாக ஆசியா இருக்கும், பல நிறுவனங்கள் இங்கு முன்னிலையில் இருக்க விரும்புகின்றன.
“எனவே, ஆசியான் ஒரு கவர்ச்சிகரமான கருத்தாக மாறுகிறது. ஆசியானுக்குள், சிங்கப்பூர் இன்று அனைத்துவக அளவில் மிக உயர்ந்த நற்பெயரைப் பெற்றுள்ளது. சிங்கப்பூர் மீது நம்பிக்கையுள்ளது. சிங்கப்பூர் போற்றப்படுகிறது,” என்றார் திரு வோங்.
எதிர்காலம்
‘முன்னேறும் சிங்கப்பூர்’ கலந்துரையாடல்களின்போது இளம் சிங்கப்பூரர்களுடன் தொடர்புகொண்டது பற்றிக் குறிப்பிட்ட துணைப் பிரதமர் வோங், அவர்கள் தங்களைவிட பெரிய பங்களிப்பை வழங்க விரும்புவதைத் தாம் உணர்ந்ததாகத் தெரிவித்தார்.
2023 அக்டோபரில் வெளியிடப்பட்ட ‘முன்னேறும் சிங்கப்பூர்’ அறிக்கை, சிங்கப்பூரர்கள் கூட்டுரிமை வீடு, கார், ரொக்கம், கடன் அட்டை, கன்ட்ரி கிளப் உறுப்பியம் ஆகிய ‘ஐந்து சி’களில் இப்போது கவனம் செலுத்துவதில்லை என்று குறிப்பிட்டது.
இளம் சிங்கப்பூரர்கள் பொருளாதார வெற்றியை அடிப்படையாகக்கொண்ட குறுகிய அளவீடுகளால் மட்டுமின்றி, அர்த்தம், இலக்குகளின் அடிப்படையிலும் அளவிடப்படும் ஒரு நல்ல வாழ்க்கையைப் பெற விரும்புகிறார்கள் என்றார் திரு வோங்.
“இவை மிகவும் உன்னதமான இலக்குகள் என்று நினைக்கிறேன்,” என்ற திரு வோங், இளம் சிங்கப்பூரர்கள் அவற்றை அடைய அரசாங்கம் உதவும் என்றார்.
“நான் வெளிப்படையாக இருப்பேன், ஆலோசனை ஆலோசனை செய்வேன், காதுகொடுத்துக் கேட்பேன். அதேநேரத்தில் சிங்கப்பூரை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்குத் தேவையான சரியான, முக்கியமான முடிவுகளை எடுப்பதிலிருந்து பின்வாங்கமாட்டேன்,” என்று தனது தலைமைத்துவ பாணி பற்றி திரு வோங் குறிப்பிட்டார்.
“எனது பதவிக்காலம் முடிவடையும்போது, நான் என்ன விட்டுச்சென்றுள்ளேன், நான் எப்படிப்பட்ட பிரதமர் என்பதைச் சொல்லும் பொறுப்பை மக்களிடம் விட்டுவிடுவேன்,” என்று கூறினார் துணைப் பிரதமர் வோங்.