ஆயுள் காப்புறுதி விற்பனை முதல் காலாண்டில் 32.2% அதிகரித்து $1.37 பில்லியன் ஆனது

2 mins read
72e40e30-e305-4ac9-97ac-3785799e541e
காப்புறுதித் தொழில்துறையில் ஒருமுறை மட்டுமே சந்தா செலுத்தும் காப்புறுதிகளுக்கு அதிக தேவை இருந்தது. விற்பனை 46.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆயுள் காப்புறுதி தொழில்துறை 2020ன் முதல் காலாண்டுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் சந்தாக்கள் ஆண்டு அடிப்படையில் 32.2 விழுக்காடு அதிகரித்து $1.37 பில்லியனாக இருந்தன என்று சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதிச் சங்கம் (எல்ஐஏ) செவ்வாய்க்கிழமை (மே 14) தெரிவித்துள்ளது. இந்தச் சந்தாக்கள் புதிய காப்புறுதித் திட்டங்களுக்கானவை.

மொத்தத்தில், ஒருமுறை மட்டுமே சந்தா செலுத்தும் காப்புறுதி விற்பனை 46.4 விழுக்காடு அதிகரித்து, $500.4 மில்லியன் ஆனது.

ஒருமுறை மட்டுமே சந்தா செலுத்தும் காப்புறுதி தேவை அதிகரிப்பதற்கு, சிங்கப்பூர் பொருளியல் 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் உயர்வைக் கண்டதுடன், ஏற்ற இறக்கம் குறைவான பொருளியல் சூழலும் காரணமாக இருக்கலாம் என்று எல்ஐஏ கூறியது.

ஆண்டுச் சந்தா செலுத்தும் காப்புறுதி விற்பனை ஆண்டு அடிப்படையில் 25.2 விழுக்காடு அதிகரித்து $866.5 மில்லியனாக இருந்தது.

கொவிட்-19 தொற்றுநோய்ப் பரவல் தொடங்கியதிலிருந்து, கடந்த சில ஆண்டுகளில் அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது காப்புறுதித் தொழில்துறையின் முதல் காலாண்டு செயல்திறன் மிகவும் வலுவாக உள்ளது என்று சங்கம் கூறியது.

ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்கள் (ஐபிஎஸ்) சுகாதாரக் காப்புறுதி பாதுகாப்பில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது என்று எல்ஐஏ குறிப்பிட்டது.

மார்ச் 31 நிலவரப்படி மேலும் 35,000 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் ஐபிஎஸ் திட்டத்தின் பாதுகாப்பைப் பெற்றனர்.

மொத்தத்தில், 2.94 மில்லியன் மக்கள், இதில் 70% சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள்-ஐபிஎஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறார்கள். இது மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்துக்கு அப்பால் பாதுகாப்பு அளிக்கிறது.

முதல் காலாண்டில் தனிப்பட்ட சுகாதாரக் காப்புறுதிச் சந்தா விற்பனை ஆண்டு அடிப்படையில் 5.3 விழுக்காடு உயர்ந்து $98.6 மில்லியன் ஆனது. இந்த தொகையில் 80 விழுக்காட்டும் மேற்பட்டவை ஐபிஎஸ், ஐபி ரைடர் சந்தாக்கள் ஆகும்.

ஆயுள் காப்புறுதி தொழில்துறை ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை சந்தாதாரர்களுக்கு $5.01 பில்லியன் செலுத்தியது. 2023ன் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இது 94.6 விழுக்காடு அதிகம்.

இதில் பெரும் பகுதி, $4.55 பில்லியன் முதிர்ச்சியடைந்த காப்புறுதிகளுக்கானவை. மீதமுள்ள தொகை மரணம், கடுமையான நோய் அல்லது இயலாமை இழப்பீடுகோரல்களுக்கானவை.

2023ன் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, ஆயுள் காப்புறுதித் தொழில்துறையில் வேலைவாய்ப்பு 1.6 விழுக்காடு சற்று வளர்ந்தது என்று எல்ஐஏ தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தத்தில், சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதி தொழில்துறையின் ஊழியர் அணி மார்ச் 31 நிலவரப்படி 9,743 ஊழியர்களை எட்டியது. அதே காலகட்டத்தில், 13,297 பிரதிநிதிகள், முகவர்களுடன் இயங்கும் நிறுவனங்களுடன் பிரத்தியேக ஒப்பந்தங்களை வைத்திருந்தனர்,

குறிப்புச் சொற்கள்