தோக்கியோ பொதுக் குளியலறையில் ஆடையற்ற இளையரைப் படம் பிடித்த சம்பவம் தொடர்பில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் அதிகாரியை விசாரணைக்காக தமது நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு ஜப்பான் காவல்துறை சிங்கப்பூர் தூதரகத்தை அணுகி உள்ளது.
ஜப்பானின் உள்ளூர் ஊடகங்கள் இதனைத் தெரிவித்தன.
தோக்கியோ பெருநகரக் காவல்துறை இந்த வேண்டுகோளை ஜப்பானிய வெளியுறவு அமைச்சின் வழியாக அனுப்பி இருப்பதாக அசாஹி ஷிம்புன் என்னும் செய்தித்தாள் மே 14ஆம் தேதி தெரிவித்தது.
சம்பவம் நடைபெற்ற போது அந்த 55 வயது ஆடவர் ஜப்பானில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் ஆலோசகராகப் பணியாற்றினார்.
தோக்கியோவில் உள்ள பொதுக் குளியலறையில் இளையர் ஒருவரை ரகசியமாகப் படமெடுத்த குற்றத்தையும் படங்களைப் பார்த்து பாலியல் இன்பம் அனுபவித்த பிற செயல்களையும் பிப்ரவரி மாதம் அவர் ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்துவதற்காக வேலையிலிருந்து அந்த அதிகாரி தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதாக மே 2ஆம் தேதி சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு கூறியது.
பிப்ரவரி 27ஆம் தேதி பொதுக் குளியலறையின் ஆண்கள் ஆடை மாற்றும் இடத்தில் ஆடையின்றி இருந்த பதின்மவயது இளையரை அவர் தமது கைப்பேசியில் படம் பிடித்ததாக ஜப்பான் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டு இருந்தன.

