சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் லாரன்ஸ் வோங்கிற்கு பாட்டாளிக் கட்சி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளன.
திரு வோங்கிடம் பிரதமர் பொறுப்பை ஒப்படைக்கவுள்ள திரு லீ சியன் லூங்கிற்கு அவை நன்றியும் தெரிவித்துக்கொண்டன. தற்போது பாட்டாளிக் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி ஆகிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகிக்கின்றனர்.
புதன்கிழமை (மே 15) திரு வோங், திரு லீ சியன் லூங்கிடமிருந்து பிரதமர் பொறுப்பை அதிகாரபூர்வமாக ஏற்பார். திரு லீ சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராக 20 ஆண்டுகளுக்குப் பதவி வகித்தது உட்பட அவரின் நீண்டகால பொதுச் சேவைக்கும் தலைமைத்துவத்துக்கும் பாட்டாளிக் கட்சி அறிக்கை ஒன்றில் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டது.
கூடுதல் வெளிப்படையான போக்கையும் பொதுமக்கள் சார்ந்த சட்டங்கள் வரைவதில் தாங்கள் மேலும் பங்காற்றவும் வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்; அந்த வகையில் அரசியல் ரீதியாகக் கூடுதல் போட்டியிருக்கும் காலகட்டத்தில் திரு வோங் நமது தேசத்தின் தலைவராகப் பொறுப்பேற்பதாகப் பாட்டாளிக் கட்சி கூறியது.
சிங்கப்பூரைத் தாண்டி கணிக்க முடியாத நிலை இருக்கும் அதேவேளையில் உள்ளூரில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன; அதனால் தேசத்தின் வருங்காலம் சவாலானதாக இருப்பதாக திரு சிங் குறிப்பிட்டார்.
“இந்த சவால்களை சமாளிக்கும் வகையில் கூடுதலான வாக்களிக்கப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்புவது உதவும். அது, நமது அரசியல் நிலைத்தன்மையின் முக்கிய அம்சமாகவும் அரசியலுக்கு வலுசேர்க்கும் அங்கமாகவும் நமது மக்கள், தேசம் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒன்றாகவும் அமையக்கூடும்,” என்று பாட்டாளிக் கட்சித் தலைவரும் சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவருமான திரு பிரித்தம் சிங் கையெழுத்திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
“பிரதமராகப் பதவியேற்கும் திரு வோங் மிகச் சிறப்பாகச் செய்ய நாங்கள் வாழ்த்துகிறோம்,” என்றார் திரு சிங்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளரும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேஸல் புவாவும் வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“புதிய தொடக்கத்துக்குள் நுழையும் சிங்கப்பூருக்குப் புதிய வாய்ப்புகளும் காத்திருக்கின்றன,” என்று அவர் கையெழுத்திட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் அறிக்கையில் கூறிய அவர் சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவியேற்கும் திரு வோங்கை மனமார வாழ்த்துவதாகச் சொன்னார்.
சிங்கப்பூரில் பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த இரண்டு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர்.
ரெட் டாட் யுனைடெட் கட்சியின் தலைமைச் செயலாளர் ரவி ஃபிலமொனும் திரு வோங்கிற்கு வாழ்த்து தெரிவித்தார்.