ஐந்தாண்டுகளில் 20 சைபீரியப் புலிகள் உயிரிழந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து கிழக்கு சீனாவில் உள்ள வனவிலங்கு பூங்கா ஒன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.
அந்தப் பூங்காவில் படுமோசமான சூழலில் புலிகள் வைக்கப்பட்டிருந்ததால் அவை மடிந்ததாகவும் சில புலிக் குட்டிகள் குளிர்சாதனப் பெட்டியின் உறைவகத்தில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் சீன ஊடகங்கள் தெரிவித்தன.
புலிகள் தவிர்த்து, இரண்டு ஆப்பிரிக்க சிங்கங்கள், மூன்று ஒட்டகச்சிவிங்கிகள், ஏராளமான குரங்குகளும் பூங்காவின் இயற்கைக்கு மாறான சூழல்களால் உயிரிழந்ததாக ‘சிக்ஸ்த் டோன்’ செய்தித்தளம் கூறியது.
அந்த உயிரிழப்புகள் குறித்து அரசாங்கத்தின் சீனா செய்திச் சேவை மே 13ஆம் தேதி செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து ஃபுயுயாங் வனவிலங்குப் பூங்கா மீதான விசாரணை தொடங்கியது.
பூங்காவின் அலட்சியப்போக்கு காரணமாக பல்வேறு விலங்குகள் உயிரிழந்ததாக சீனா செய்திச் சேவை கூறியதாக ‘த பேப்பர்’ ஊடகம் குறிப்பிட்டது.
பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை சட்டவிரோதமாக வளர்த்து வந்ததாகவும் உரிமம் இன்றி விலங்குகளை விற்று வந்ததாகவும் விலங்குகளை மோசமான நிலையில் வைத்திருந்ததாகவும் அந்தத் தனியார் வனவிலங்குப் பூங்கா மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

