இன்று திரு லாரன்ஸ் வோங் இஸ்தானா அதிபர் மாளிகையில் பிரதமராகப் பதவியேற்றதும் அங்கு விருந்து வழங்கப்படுகிறது. பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் உணவங்காடிக் கடையான ‘ஸ்கை லேப் குக் ஃபுட்’ கடை தயாரித்த இறால் வடை, மசால் வடை, சமோசா ஆகியவற்றைச் சுமார் 1,000 விருந்தினருக்காகப் பரிமாறினர். கடை உரிமையாளர் பொன்னம்மா சண்முகத்தின் தலைமையில் பலகாரங்கள் சமைக்கப்பட்டன.
இதற்கான தயாரிப்புப் பணிகள் இரண்டு வாரத்திற்கு முன்னரே தொடங்கியதாக தேக்கா உணவு நிலையத்திலுள்ள அக்கடையின் இணை உரிமையாளரும் திருவாட்டி பொன்னம்மாவின் பேரனுமான திரு ஆனந்தராஜ், 32, கூறினார், “மக்களால் பெரிதும் விரும்பப்படும் நம் இறால் வடையை அதிபர் மாளிகை அதிகாரிகள் கேட்டிருந்தனர். இறால் வடைக்காக எங்கள் கடை, 2011, 2013ஆம் ஆண்டுகளில் ‘மக்கான்சுத்ரா’ உணவு விமர்சனத் தளத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது,” என்றும் திரு ஆனந்தராஜ் கூறினார்.
“ஹோட்டல் ஒன்றின் சமையல் வசதிகளைப் பயன்படுத்தி தாமும் தம் பேரப்பிள்ளைகள் மொத்தம் ஐந்து பேர் சமையலில் ஈடுபட்டதாகத் திருவாட்டி பொன்னம்மா சண்முகம், 75, தமிழ் முரசிடம் தெரிவித்தார். “காலையிலேயே நாங்கள் தயாரித்து பிற்பகலில் அதிகாரிகள் சோதனை செய்தனர்,” என்றார் திருவாட்டி பொன்னம்மா.
இக்கடையினர், கடந்தாண்டு மார்ச் மாதம் அதிபர் மாளிகையில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் இறால் வடையுடன் நெத்திலி வடையையும் பரிமாறினர்.
இறால் வடை, தமது தாயாரின் கைப்பக்குவம் என்று தெரிவித்த திருவாட்டி பொன்னம்மா, தம் தாயாரின் உணவை அதிபர் மாளிகை விருந்தினர்கள் சுவைப்பதை நினைக்கும்போது பெருமையாக இருப்பதாகக் கூறினார்.
“இந்த வாய்ப்பு மிக அரிது. பிரதமர் பதவியேற்பு விழாவில் உணவு பரிமாறும் நிறுவனங்களில் ஒரே இந்தியக் கடை என்ற முறையில் நாங்கள் பெருமைப்படுகிறோம்,” என்று அவர் கூறினார்.
மொத்தம் 11 வகையான உணவு வகைகள் பதவியேற்பு விருந்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் எட்டு வகையான உணவு ஐந்து உணவங்காடிக் கடைகள் தயாரித்தவை.
விருந்தில் இடம்பெற்ற உணவுகள் பெரும்பாலும் சிங்கப்பூரில் உற்பத்தியான உணவுப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. இறால் வடையில் உள்ள இறாலிலிருந்து விருந்தில் இடம்பெறும் மீன், முட்டை, கீரை என்று பல உணவுப் பொருள்களும் உள்ளூரில் உற்பத்தியானவை.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர், 2030ஆம் ஆண்டுக்குள் தனது ஊட்டச்சத்துத் தேவைகளில் 30 விழுக்காட்டை உள்ளூரிலேயே தயாரிக்கும் இலக்கைக் கொண்டுள்ளது. அந்த இலக்கை ஆதரிக்கும் வகையில் இந்த உள்ளூர் விருந்து தயாராகி உள்ளது.