பெண்களின் அந்தரங்கப் படங்களை ஏமாற்றிப் பெற அவர்களின் சமூக ஊடகக் கணக்குகளின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொண்ட முழுநேர சிங்கப்பூர் ஆகாயப் படை சேவையாளருக்கு 11 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கணினியின் தவறான பயன்பாட்டுக்கான சட்டத்தின்கீழ் தன் மீது பதிவுசெய்யப்பட்ட 10 குற்றச்சாட்டுகளைக் குற்றவாளியான 26 வயது கே. ஈஷ்வரன் ஒப்புக்கொண்டார். தீர்ப்பளிக்கும்போது மேலும் 21 குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.
2019லிருந்து 2023ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 22 பெண்களின் சமூக ஊடகக் கணக்குகள் உள்ளிட்டவற்றுக்கான தனிப்பட்ட விவரங்களை ஏமாற்றிப் பெற மின்னஞ்சல்களை ஈஷ்வரன் அவர்களுக்கு அனுப்பினார். தனக்குத் தெரிந்தவர்கள் உட்பட ஈஷ்வரன் பல பெண்களைக் குறிவைத்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.
நீதிமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
வரும் ஜூன் மாதம் 19ஆம் தேதி முதல் ஈஷ்வரன் சிறைத் தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார். ஈஷ்வரனின் மனைவி இம்மாதத் தொடக்கத்தில் குழந்தை பெற்றுக்கொண்டதால் அவருக்கு உதவவும் தனிப்பட்ட விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளவும் அவருக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து சிங்கப்பூர் ஆயுதப் படை கருத்து தெரிவித்துள்ளது.
தனது அதிகாரிகள் உயர் ஒழுக்கம், நேர்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
குற்றம் புரியும் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது கூறியது.
ராணுவ நிபுணர் 1 கே. ஈஸ்வரனுக்கு அரசு நீதிமன்றம் தண்டனை விதித்திருப்பது தனக்குத் தெரியும் என்று சிங்கப்பூர் ஆயுதப் படை தெரிவித்தது.
ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டதாக அது கூறியது.
ஈஸ்வரன் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் அவருக்கு எதிராகக் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் ஆயுதப் படை தெரிவித்தது.
ஈஸ்வரன் பதவி நீக்கம் செய்யப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

