தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருள் சட்டங்கள் குறித்த முன்னாள் அரசியல் கைதியின் கருத்து வருத்தத்துக்குரியது: உள்துறை அமைச்சு

2 mins read
f2eca4b4-f70b-4d98-9e13-96fd361bc8c0
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

அரசாங்கத்தின் போதைப்பொருள் தொடர்பான சட்டங்கள் பலனளிக்காதவை என்று முன்னாள் அரசியல் கைதியான டியோ சோ லங் வெளியிட்ட கருத்துகள் வருத்தத்துக்குரியவை என்றும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியதில் மாற்றம் ஏதும் கிடையாது என்றும் உள்துறை அமைச்சு எடுத்துரைத்துள்ளது.

விவகாரங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசும்போது சம்பந்தப்பட்டோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கமுடியாது. அந்த அம்சத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு திரு சண்முகம் நாடாளுமன்றத்தில் அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிட்டதாக முன்னாள் அரசியல்வாதியும் வழக்கறிஞருமான திருவாட்டி டியோ மறைமுகமாகச் சுட்டிக்காட்டியதாக உள்துறை அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (மே 17) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

விவகாரங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசும்போது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கமுடியாது என்ற விதிமுறைக்கு திரு சண்முகம், அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிடும்போது தம்மை உட்படுத்திக்கொள்ளவில்லை என்றும் உள்துறை அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“திருவாட்டி டியோ அல்லது வேறு யாரேனும் (அமைச்சர்நிலை) அறிக்கையில் உள்ள அம்சங்கள் சரியானதாகத் தென்படவில்லை என்று எண்ணினால் அவர்கள் நடவடிக்கை எடுக்கலாம்,” என்றும் தெரிவிக்கப்பட்டது.

இம்மாதம் எட்டாம் தேதியன்று திரு சண்முகம், சிங்கப்பூரின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் விரிவாகப் பேசினார். போதைப்பொருளுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாடு உள்ளிட்டவற்றின் தொடர்பில் அவர் விவரித்தார்.

அதுபற்றிக் கருத்துரைத்த திருவாட்டி டியோ, அரசாங்கத்தின் போதைப்பொருள் சட்டங்கள் பலனளிக்கவில்லை என்றும் போதைப்பொருள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தீர்வுகாணப்படவில்லை என்றும் இம்மாதம் 12ஆம் தேதியன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

பல்வேறு சிங்கப்பூரர்களையும் அமைப்புகளையும் திரு சண்முகம் தாக்கிப் பேசியதாக திருவாட்டி டியோ குற்றஞ்சாட்டினார். பொதுமக்களுக்குத் தவறான கருத்தை வழங்குவதாகக் குறிப்பிட்ட சில ஆர்வலர்களைப் பற்றி திரு சண்முகம் வேண்டுமென்றே குறைகூறியதாகவும் அவர் சாடினார்.

குறிப்புச் சொற்கள்