சிறைச்சாலை அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து, அதிபருக்கும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஆடவர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
அந்த 24 வயது சந்தேக நபரின் பெயர் பிரகாஷ் பரமசிவம். மே 17ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரகாஷ்மீது மூன்று மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிங்கப்பூர் அதிபர் அலுவலகம், தேசிய வளர்ச்சி அமைச்சு, நாடாளுமன்றத்தில் இருக்கும் ஊழியர்கள் ஆகியோரை ஏமாற்றியதாகப் பிரகாஷ்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அவர், பிப்ரவரி 16 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் திரு லீக்கு இரண்டு நாள் கழித்து மின்னஞ்சல் அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பிப்ரவரி 24ஆம் தேதி அதிபர் தர்மனுக்கும் மின்னஞ்சல் அனுப்பியதாகக் கூறப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களில் மின்னஞ்சல்களில் இடம்பெற்றிருந்த தகவல்கள் குறித்தும் பிரகாஷ் ஏன் அவற்றை அனுப்பினார் என்பதைக் குறித்தும் எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை.
அவரது வழக்கு ஜூன் 20ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

