சிங்கப்பூர் அறிவியல் பூங்காவில் முதல் குடியிருப்புப் பேட்டைத் திட்டத்தின்கீழ், 300 கூட்டுரிமை வீடுகள் கட்டப்படவிருக்கின்றன.
ஏறக்குறைய 0.7 ஹெக்டர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் அந்தக் கூட்டுரிமை வீடுகள், கென்ட் ரிட்ஜ் ரயில் நிலையத்துடன் இணைக்கப்படும். அந்த ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாட்டுப் பகுதி 2025ல் முழுமையாகத் திறக்கப்படும் என்று ‘கேபிட்டாலேண்ட் டெவலப்மெண்ட்’ (சிஎல்டி) நிறுவனம் தெரிவித்தது.
மே 17ஆம் தேதி, வர்த்தகப் பூங்கா பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு நிலப்பகுதியை குடியிருப்புக்கு ஒதுக்குவது குறித்து பெருந்திட்டத்தில் மாற்றம் செய்வதற்கான பரிந்துரையை நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்டது.
அதன்கீழ், 71 சயின்ஸ் பார்க் டிரைவில் 2000 முதல் 2018ஆம் ஆண்டு வரை தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு பயன்படுத்திய நிலப்பகுதியைக் கூட்டுரிமை வீட்டுத் திட்டத்துக்கு ஒதுக்குவதற்கு கொள்கை அளவிலான ஒப்புதலை ஆணையம் வழங்கியுள்ளது.
அந்த வர்த்தகப் பூங்காவிலும் ஒன்-நார்த் வட்டாரம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றில் வேலைசெய்வோரைப் புதிய கூட்டுரிமை வீடுகள் ஈர்க்கும் என்று சிஎல்டி நிறுவனம் கூறியது.
கட்டுமான ஒப்புதல் கிடைத்தபிறகு மூன்று அல்லது நாலாண்டுக்குள் கூட்டுரிமை வீட்டுக் கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும் என்று அது குறிப்பிட்டது.

