ஜோகூரின் உலு திராம் காவல் நிலையத்தின் மீது மே 17ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசியாவிலிருக்கும் அல்லது அங்கு செல்லும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்கும்படியும் தங்கள் சொந்தப் பாதுகாப்பை முன்னிட்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்படும்படியும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
மே 17ஆம் தேதி அதிகாலை நடந்த தாக்குதலில், உலு திராம் காவல் நிலைய அதிகாரிகள் இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
“அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்த அதிகாரி விரைவில் நலம்பெற வேண்டுகிறோம்,” என்று அமைச்சு கூறியது.
சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட தாக்குதல்காரர், அல் காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஜமா இஸ்லாமியா போராளிக் குழுவின் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படுவதாக மலேசிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
தாக்குதலை அடுத்து, தாக்குதல்காரரின் குடும்பத்தில் ஐவர் உட்பட, ஏழு பேரை மலேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகமும் ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகமும் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.
மலேசியா செல்லும் சிங்கப்பூரர்கள் இணையம் வழியாக அமைச்சிடம் விவரங்களைப் பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நெருக்கடி ஏதும் ஏற்பட்டால் அவர்களைத் தொடர்புகொள்ள அது உதவும்.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாடுகளுக்குச் செல்வோர் விரிவான மருத்துவ, பயணக் காப்பீடுகளை வாங்கவும் அமைச்சு ஊக்குவித்துள்ளது.

