எஃப்-16 விமான விபத்துக்கான காரணம் தெரிந்தது: தற்காப்பு அமைச்சு

எஃப்-16 விமான விபத்துக்கான காரணம் தெரிந்தது: தற்காப்பு அமைச்சு

2 mins read
4e52ae7b-6479-4583-be8a-3a53d8546700
நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள விமானம் மீண்டும் சேவையாற்றத் தொடங்கும் என்று தற்காப்பு அமைச்சு கூறியது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப் படையின் எஃப்-16 ரக விமானம் விபத்துக்கு உள்ளானதற்கான காரணம் கண்டறியப்பட்டுவிட்டது என்றும் விரைவில் அந்த ரக விமானங்கள் சேவைக்குத் திரும்பும் என்றும் தற்காப்பு அமைச்சு தெரிவித்து உள்ளது.

விமானத்தின் தகவல் பதிவுக் கருவியை ஆராய்ந்தபோது, விமானத்தின் கட்டுப்பாட்டுக் கணினியில் ‘ஜைரோஸ்கோப்’ எனப்படும் திசை காட்டும் நுண்ணோக்கி தவறான ஒலி விகிதத்தைக் காட்டியது தெரியவந்தது.

அதன் காரணமாக, விமானத்தை மேல்நோக்கிச் செலுத்தியபோது விமானியால் விமானத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்று சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப் படையும் விமானத் தயாரிப்பாளர் லாக்‌ஷீட் மார்ட்டினும் இணைந்து நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

தற்காப்பு அமைச்சு சனிக்கிழமை (மே 18) வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

விமானக் கட்டுப்பாட்டுக் கணினியில் ‘ஜைரோஸ்கோப்’ தவறான தகவலைத் தந்தால் விமானியால் விமானத்தைக் கட்டுப்படுத்த இயலாது என்று சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப் படையின் முன்னாள் விமானி ஓங் சுவீ சுவான், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.

எஃப்-16 விமானங்களில் நான்கு ‘ஜைரோஸ்கோப்’கள் பொருத்தப்பட்டு இருக்கும். விபத்து நிகழ்ந்தபோது ஒன்றுக்கு மேற்பட்ட ‘ஜைரோஸ்கோப்’கள் பழுதடைந்ததாக அமைச்சு தெரிவித்து உள்ளது.

இவ்வாறு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ‘ஜைரோஸ்கோப்’கள் பழுதடைவது என்பது மிகவும் அரிது என்றும் இங்கு 35 ஆண்டுக்கு மேலாக இயக்கப்பட்டு வரும் எஃப்-16 விமானத்தில் இதுபோன்ற கோளாறு இப்போது முதல்முறையாக நிகழ்ந்து இருக்கிறது என்றும் அது குறிப்பிட்டது.

எஃப்-16 விமான விபத்து மே 8ஆம் தேதி நிகழ்ந்தது. அந்த ரகத்தைச் சேர்ந்த விமானங்கள் சிங்கப்பூர் ஆகாயப் படையில் 1980களில் சேர்க்கப்பட்டது முதல் இது நான்காவது விபத்து ஆகும்.

பரவலாக பயன்படுத்தப்படும் அதிநவீன எஃப்-16 ரக விமானங்கள் உலகம் முழுவதும் 25 ஆகாயப் படைகளில் இயக்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்