சிங்கப்பூரின் வடக்கு வட்டாரக் குடியிருப்பாளர்களுக்குச் சேவையாற்ற ‘உட்லண்ட்ஸ் ஹெல்த்’ என்னும் புதிய சமூக மருத்துவமனையில் புதிய வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன.
அந்தப் பொது மருத்துவமனை தனது அவசர சிகிச்சை வார்டையும் தீவிர சிகிச்சை வார்டையும் மே 17ஆம் தேதி திறந்ததாக அறிவித்து உள்ளது.
வடக்கு வட்டாரத்தில் குடியிருப்போர், 17 உட்லண்ட்ஸ் டிரைவ் 17ல் அமைந்துள்ள இந்தப் புதிய, ஒருங்கிணைந்த மருத்துவமனையை இனிமேல் அவசர மற்றும் தீவிர சிகிச்சைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அந்த மருத்துவமனை தனது சிறப்பு சிகிச்சை மருந்தகங்களையும் 40 சமூக மருத்துவமனைப் படுக்கைகளையும் 2023 டிசம்பர் மாதம் திறந்தது.
மே இறுதிவாக்கில் மொத்தம் 430 தீவிர சிகிச்சை மற்றும் சமூக மருத்துவமனைக்கான படுக்கைகள் இருக்கும் என்று மருத்துவமனை தெரிவித்து உள்ளது.
வருங்காலத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக 1,800 படுக்கைகளாக அவற்றை விரிவுபடுத்த இருப்பதாகவும் அது கூறியது.
தீவிர சிகிச்சைக்கும் சமூகப் பராமரிப்புக்கும் புதிதாக 1,000 படுக்கைகள் அதில் அமையும். மருத்துவமனையின் நீண்டகாலப் பராமரிப்புப் பிரிவில் ஏறக்குறைய 400 படுக்கைகள் அமைக்கப்படும் என்றும் உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனை குறிப்பிட்டு உள்ளது.
தீவிரப் பராமரிப்புப் பிரிவு, இதய சிகிச்சை நிலையம், நோய் கண்டறியும் கதிரியக்கப் பிரிவு போன்ற தீவிரப் பராமரிப்புக்கான பகுதிகளையும் அந்தப் புதிய மருத்துவமனை திறந்து உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நோயாளிகளை விரைந்து பராமரிப்பதற்கு ஏதுவாக இதுபோன்ற சேவைகள் அவசர சிகிச்சைப் பிரிவுடனும் அறுவை சிகிச்சை அரங்குகளுடனும் இணைக்கப்பட்டு உள்ளன.
சாதாரண சிகிச்சைகளும் அவசர சிகிச்சைகளும் ஒரே கட்டடத்தில் இயங்குவதால் நோயாளிகள் தங்குதடையற்ற சேவைகளை உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் பெறமுடியும்.
குறிப்பாக, மருத்துவம், தாதிமை மற்றும் மறுவாழ்வுப் பராமரிப்பு போன்ற வெவ்வேறு சேவைகளை, சம்பந்தப்பட்ட அதே மருத்துவர்களே வழங்கும் வசதி அங்கு உள்ளது.
தீவிர சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்குத் திரும்பும் நோயாளிகள் அங்குள்ள தாழ்வாரத்தைக் கடந்தாலே போதுமானது. வெவ்வேறு வசதிகளுக்கு வெவ்வேறு பிரிவுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இராது.