இசை நிகழ்ச்சியை மையமாகக் கொண்ட சுற்றுலாத் துறை என்பது சிங்கப்பூர் கவனம் செலுத்தக்கூடிய வளர்ச்சி வாய்ப்பு என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார்.
மேலை நாட்டு நிகழ்ச்சிகளைக் கவனித்தால், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சுற்றுப்பயணம் செய்வதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினர். ஆசியாவில் தற்போது அத்தகைய நிகழ்ச்சிகளுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது என்றார் அவர்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் புகழ்பெற்ற படைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகள் பலத்த வரவேற்பைப் பெற்றதை அடுத்து, குடியரசை இசை நிகழ்ச்சிகளுக்கான மையமாக நிறுவுவதில் கவனம் செலுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
ஜனவரியில் ‘கோல்ட்பிளே’யின் ஆறு நிகழ்ச்சிகளைக் காண 200,000க்கும் மேற்பட்டோர் சிங்கப்பூருக்கு வந்தனர். அதேபோல் மார்ச்சில் டெய்லர் சுவிஃப்டின் ஆறு நிகழ்ச்சிகளைக் காண 300,000க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
இவ்விரு நிகழ்ச்சிகள் மூலம் சிங்கப்பூர்ப் பொருளியல் 450 மில்லியன் வெள்ளி வரை வளர்ச்சி கண்டதாகத் தனியார் துறை மதிப்பீடுகள் காட்டுகின்றன. அதிக அளவிலான அனைத்துலகப் பயணிகளின் வருகை, ஹோட்டல் அறைகளுக்கான பதிவு, சுற்றுப்பயணத் துறை ஈட்டிய வருவாய் ஆகியவை மதிப்பிடப்பட்டன.
பிப்ரவரி 16ஆம் தேதி தேசிய அரங்கில் நடைபெற்ற எட் ஷீரனின் ஒருநாள் நிகழ்ச்சி மொத்தம் 60,000 பேரை ஈர்த்தது. சில வாரங்களில் அதே இடத்தில் சுவிஃப்ட்டின் ரசிகர்கள் ஏறக்குறைய 63,000 பேர் கூடினர்.
மீண்டும் அதுபோன்ற எண்ணிக்கையில் ரசிகர்கள் திரள்வர் என்று எதிர்பார்க்க முடியாது என்றாலும், இந்த ஆண்டுப் பிற்பாதியில் சிங்கப்பூர் விளையாட்டு மையத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அமைச்சர் டோங் கூறினார். மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.
இவ்வேளையில், சிங்கப்பூர் விளையாட்டு மையத்திற்கு இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் வருகை தந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஒப்புநோக்க, சென்ற ஆண்டின் (2023) பிற்பாதிக்கான மொத்த வருகையாளர் எண்ணிக்கை 700,000ஆகப் பதிவானது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மட்டும் மொத்தம் 840,000 பேர் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சிகள் தேசிய அரங்கில் இடம்பெற்றன. இந்தத் தகவல்களை அமைச்சர் எட்வின் டோங் பகிர்ந்துகொண்டார்.
கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை, சிங்கப்பூருக்கு 5.7 மில்லியன் அனைத்துலகப் பயணிகள் வந்துசென்றனர். மார்ச்சில் மட்டும் 1.48 மில்லியன் பேர் வந்ததாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது. மார்ச்சில் சில்லறை விற்பனை 2.7 விழுக்காடு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.