மாண்ட தீயணைப்பாளருக்கு அஞ்சலி

3 mins read
64b13f0d-a0bd-4f34-8402-4790a608af40
மரணமடைந்த கேப்டன் டேவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. - படம்: சாவ்பாவ்
கேப்டன் கென்னத் டே.
கேப்டன் கென்னத் டே. - படம்: பெரித்தா ஹரியான்
கேப்டன் டேயின் இறுதி ஊர்வலம்.
கேப்டன் டேயின் இறுதி ஊர்வலம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கப்பலில் மூண்ட தீயை அணைக்கப் போராடியபோது சுயநினைவு இழந்து, பிறகு மாண்ட சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரியான 30 வயது கேப்டன் கென்னத் டேவுக்கு மே 20ல் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இச்சடங்கு உபியில் உள்ள சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தலைமையகத்தில் நடைபெற்றது.

முழுக் கடப்பாட்டுடன் தன்னலமற்ற வகையில் செயல்பட்ட கேப்டன் டே, சிங்கப்பூரர்களின் நினைவில் நீங்கா இடம்பிடித்துள்ளத்தாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஆணையர் எரிக் யாப் தெரிவித்தார்.

கேப்டன் டே சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் மனநல ஆலோசகராகவும் வாழ்க்கைத் தொழில் அதிகாரியாகவும் செயல்பட்டதை ஆணையர் யாப் நினைவுகூர்ந்தார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தலைமையகத்தில் அவருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி செலுத்தும் சடங்கில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த ஏறத்தாழ 200 அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கேப்டன் டேயின் நல்லுடல் தெலுக் பிளாங்காவில் வைக்கப்பட்டது.

பலர் அங்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.

அதை அடுத்து, அவரது நல்லுடல் பிரைட் ஹில்லில் உள்ள கொங் ஹெங் சான் போ சீ மடாலயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

கேப்டன் டேயின் இறுதிச் சடங்கு அங்கு நடைபெற்றது.

இறுதிச் சடங்கு நிறைவடைந்ததும் அவரது சவப்பெட்டியை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் கடற்துறைப் பிரிவைச் சேர்ந்த எட்டு அதிகாரிகளும் கேப்டன் டேயுடன் பயிற்சி பெற்ற அதிகாரிகளும் ஏந்தினர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குச் சொந்தமான ‘ரெட் ரைனோ’ என்றழைக்கப்படும் சிறிய தீயணைப்பு வாகனத்துடன் இணைக்கப்பட்ட அமரர் ஊர்திக்குள் கேப்டன் டேயின் சவப்பெட்டி வைக்கப்பட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் இசைக்குழு கேப்டன் டேக்குப் பிரியாவிடை அளிக்கும் வகையில் இசைக் கருவிகளை வாசிக்க, அமரர் ஊர்திக்குப் பின்னால் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த 16 அதிகாரிகள் ஊர்வலமாகச் சென்றனர்.

வழிநெடுகிலும் சீருடை அணிந்த, துக்கம் அனுசரிக்கும் வகையில் கரத்தில் கறுப்புப் பட்டை அணிந்திருந்த 150 அதிகாரிகள் கேப்டன் டேக்கு மரியாதை செலுத்தினர்.

மடாலயத்திலிருந்து கேப்டன் டேயின் நல்லுடல் தகனச் சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அவரது நல்லுடல் தகனச் சாலையை அடையும் வரை தகனச் சாலைக்கு இட்டுச் செல்லும் பாதையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த அதிகாரிகள் சாலையோரம் நின்று அஞ்சலி செலுத்தினர்.

அதிகாரிகள் சிலர் மீளாத் துயரில் ஆழ்ந்து, சோகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதனர்.

கேப்டன் டேயின் நல்லுடலுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் எண் 1 சீருடையுடன் அவர் பெற்ற பதக்கங்களும் வைக்கப்பட்டிருந்தன.

இறுதிச் சடங்குகளில் கிட்டத்தட்ட 200 அதிகாரிகளுடன் உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைசால் இப்ராகிமும் கலந்துகொண்டார்.

கேப்டன் டேயின் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.

கேப்டன் டே தாதிமைக் கல்வியில் பட்டம் பெற்றவர்.

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் அவர் சேர்ந்தார்.

மே 16ஆம் தேதி சிங்கப்பூர் கடற்பகுதியில் நங்கூரமிட்டிருந்த கப்பல் ஒன்றில் தீ மூண்டது.

அந்தக் கப்பல் சீனாவைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

தீயை அணைக்கும் பணிகளில் கேப்டன் டே ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவர் சுயநினைவு இழந்தார்.

அவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அதே நாளன்று அவர் உயிர் பிரிந்தது.

குறிப்புச் சொற்கள்