நேரத்துக்குக் கட்டணங்களைச் செலுத்துவதில் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக சிங்கப்பூர் நிறுவனங்கள் மேம்பட்டுள்ளன.
சிங்கப்பூர் வர்த்தகக் கடன் பிரிவு (எஸ்சிசிபி) திங்கட்கிழமையன்று (மே 20) வெளியிட்ட புள்ளி விவரங்களில் இது தெரியவந்தது.
“2022ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டுக்குப் பிறகு தாமதமாகக் கட்டணம் செலுத்தும் போக்கு ஆகக் குறைவாகக் காணப்படுகிறது. இந்த அம்சத்தில் சில்லறை, ஒட்டுமொத்த விற்பனைத் துறைகளில் சிறிதளவு பின்னடைவு ஏற்பட்டபோதும் இந்நிலை உருவானது,” என்று எஸ்சிசிபி தலைமை நிர்வாக அதிகாரி ஆட்ரி சியா கூறினார்.
முந்தைய காலாண்டில் பதிவானதுடன் ஒப்பிடுகையில் தாமதமாகச் செலுத்தப்பட்ட கட்டணங்கள் 0.03 விழுக்காடு குறைந்து 44.12 விழுக்காடாகப் பதிவானது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவானதுடன் ஒப்புநோக்க இவ்வாண்டு விகிதம் 0.1 விழுக்காடு குறைந்துள்ளது.
காலாண்டு அடிப்படையில் இவ்வாண்டு முதல் காலாண்டில் நேரத்துக்குச் செலுத்தப்பட்ட கட்டணங்களின் விகிதம் 0.02 விழுக்காடு கூடி 41.07 விழுக்காடாகப் பதிவானது. ஆண்டு அடிப்படையில் இந்த விகிதம் 0.04 விழுக்காடு அதிகரித்தது.
ஆராயப்பட்ட ஐந்து துறைகளில் மூன்றில் காலாண்டு அடிப்படையில் தாமதமாகக் கட்டணம் செலுத்தும் போக்கு குறைந்தது. கட்டுமானம், உற்பத்தி, சேவைத் துறைகள் மேம்பாடு காணப்பட்ட துறைகளாகும்.
மற்ற இரண்டு துறைகளான சில்லறை வர்த்தகம், ஒட்டுமொத்த விற்பனை ஆகியவற்றில் தாமதமாகச் செலுத்தப்பட்ட கட்டணங்கள் கூடின.

