கேகே மருத்துவமனையில் புதிய சிறார் மருந்தகம்

கேகே மருத்துவமனையில் புதிய சிறார் மருந்தகம்

2 mins read
உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கும் மரபணுக் கோளாற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கானது
899c8e95-194a-440e-8299-9a0f36c5ad01
‘கேகேஎச் லிபிட் சென்டர்’ நிலையம், மரபணு ரீதியாக ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கும் கோளாற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்கும் சிங்கப்பூரின் முதல் மருந்தகம் ஆகும். - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

கேகே மகளிர், சிறார் மருத்துவமனை, ‘கேகேஎச் லிபிட் சென்டர்’ எனும் புதிய மருந்தகத்தைத் தொடங்கியுள்ளது.

‘எஃப்எச்’ எனும் ஒருவகை மரபணுக் கோளாற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் பதின்ம வயதினருக்கும் சிறு வயதிலிருந்தே உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கும்.

கொழுப்புச்சத்தின் வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கும் இக்கோளாறு, பிறக்கும்போதே குழந்தையின் உடலில் ‘டிஸ்லிபிடேமியா’ எனும் ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கும் பாதிப்பை உண்டாக்கும்.

இதனால் அளவுக்கதிகமான கொழுப்பு படிந்து ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அவற்றின் சுற்றளவு குறைவதால் இதய நோய்கள் ஏற்படும் என்று கேகே மருத்துவமனை கூறியது.

அத்தகைய பாதிப்புக்கு ஆளானோர், சிகிச்சைக்கு இந்தப் புதிய மருந்தகத்தை நாடலாம். சிங்கப்பூரில் இத்தகைய சிகிச்சை அளிக்கும் முதல் மருந்தகம் இது.

கேகே மருத்துவமனையின் தலைமையிலான சிங்ஹெல்த் டியூக்-என்யுஎஸ் தாய், சேய் நல ஆய்வுக் கழகம் அமைத்துள்ள இந்தப் புதிய மருந்தகம், பிள்ளைப் பருவத்தில் ‘எஃப்எச்’ மரபணுக் கோளாற்றை அடையாளம் கண்டு சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தக் கோளாறு பெரியவர்களிடையே ஏற்படுத்தும் பாதிப்பைவிட, சிறுவர்களிடையே தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அதற்குத் தீவிர சிகிச்சை தேவைப்படும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, சிங்கப்பூரில் ஏறக்குறைய 35,000 பேர் ‘எஃப்எச்’ கோளாற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 140 பேரில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு உள்ளது. இவர்களில் 4,000 பேர் சிறுவர்கள் அல்லது பதின்ம வயதினர் என்று கேகே மருத்துவமனை மே 20ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், சிங்கப்பூரில் இந்தக் கோளாற்றால் பாதிக்கப்பட்டுள்ள 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர், குறிப்பாக சிறாரும் பதின்ம வயதினரும், பாதிப்பை இன்னும் அடையாளம் காணவில்லை அல்லது உரிய நேரத்தில் சிகிச்சை பெறவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மருத்துவமனைமகளிர்சிறுவர்மரபணுமருந்தகம்கேகே மருத்துவமனை