போதைப்பொருள் முறியடிப்பு நடவடிக்கை; 14 வயது இளையர் உட்பட 159 பேர் கைது

2 mins read
9bc89893-166f-4774-b4d0-c30bef4c4b81
சோதனை நடவடிக்கையின்போது கண்டெடுக்கப்பட்ட கஞ்சாச் செடிகள். - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, 12 நாள்களாக நடத்திய அதிரடி சோதனையில் 150க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானோரில் ஆக இளம் சந்தேக நபருக்கு வயது 14. சோதனை நடவடிக்கையில் சுமார் 221,000 வெள்ளி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அங் மோ கியோ, புக்கிட் பாத்தோக், ஃபெர்ன்வேல். கேலாங் பாரு, ஹவ்காங், பாசிர் ரிஸ், செம்பவாங், தெக் வாய், ஈ‌சூன் உள்ளிட்ட பகுதிகளில் மே மாதம் ஆறாம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. திங்கட்கிழமையன்று (மே 20) அறிக்கை ஒன்றின் மூலம் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இத்தகவல்களை வெளியிட்டது.

கைதான சந்தேக நபர்களில் ஆக இளையவர் உயர்நிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு ஆண் மாணவர் என்று தெரிவிக்கப்பட்டது. மே ஆறாம் தேதியன்று ஃபெர்ன்வேல் ரோட்டுக்கு அருகே உள்ள அவரின் வீட்டில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர் கைதானார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் அந்த இளையரின் 52 வயது தந்தையும் கைது செய்யப்பட்டார். தந்தை, மகன் இருவரும் சிங்கப்பூரர்கள் ஆவர்.

ஐஸ், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் வகைகள் அவர்களின் விட்டில் கண்டெடுக்கப்பட்டன. தந்தை, தனது மகனுக்கு போதைப்பொருள் கொடுத்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

அதேபோல் மே 16ஆம் தேதியன்று ஈ‌சூன் அவென்யூ மூன்று அருகே உள்ள ஒரு வீட்டை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது 18 வயது சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டார்.

கஞ்சாச் செடி உள்ள ஒரு சட்டி, காய்ந்துபோன கஞ்சாச் செடியின் மிச்சமீதியைக் கொண்ட மூன்று சட்டிகள் ஆகியவை அந்த இளையரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. மற்ற போதைப்பொருள் சார்ந்த பொருள்களும் அவர் வீட்டில் இருந்தன.

இந்த சோதனை நடவடிக்கையில் கைதான ஐவரில் கிட்டத்தட்ட இருவர் 30 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கொள்கை, நிர்வாகப் பிரிவு இணைத் தலைவர் சுங் செர்ன் ஹோங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்