சிங்கப்பூர் ராணுவ வீரர்கள், மேலும் நம்பகமான, துல்லியமான, எடைகுறைந்த புதிய ரக இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
சிங்கப்பூர் ஆயுதப் படை, திங்கட்கிழமை (மே 20) இந்தத் தகவலை வெளியிட்டது.
சிங்கப்பூர் ராணுவ வீரர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல், கட்டங்கட்டமாக ‘இன்ஃபன்ட்ரி ஆட்டோமேட்டிக் ரைஃபிள் 6940இ-எஸ்ஜி’ ரகத் துப்பாக்கிகள் வழங்கப்படுவதாக அது தெரிவித்தது.
அமெரிக்காவின் கோல்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய இயந்திரத் துப்பாக்கிகளை, தற்காப்பு அறிவியல் தொழில்நுட்ப அமைப்பான ‘டிஎஸ்டிஏ’வுடன் இணைந்து மதிப்பிட்டு, கொள்முதல் செய்ததாக சிங்கப்பூர் ஆயுதப்படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்தப் புதிய ரகத் துப்பாக்கி சிங்கப்பூர் ராணுவ வீரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருப்பதாக அது கூறியது.
எடுத்துக்காட்டாக, இடக்கைப் பழக்கமுள்ள வீரர்கள், வலக்கைப் பழக்கம் உள்ள வீரர்கள் என இரு தரப்பினருமே இதை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
ராணுவத்தின் வருங்காலத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் மாற்றங்களைச் செய்துகொள்ளும் வசதியும் இந்தத் துப்பாக்கியில் உண்டு.
1982ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படும் ‘எஸ்ஏடபிள்யூ’ ரகத் துப்பாக்கியைவிட இது 17 விழுக்காடு நீளம் குறைவு.
தொடர்புடைய செய்திகள்
கோல்ட் நிறுவனத்தின் இந்த இலகுரகத் துப்பாக்கிகளை அமெரிக்கக் கடற்படை ஏற்கெனவே பயன்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் கடற்படைக் காவலர்கள் இந்த ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டது.
பழைய ‘எஸ்ஏடபிள்யூ’ ரகத் துப்பாக்கிகளுக்குப் பதில் புதிய துப்பாக்கிகளை வீரர்களுக்கு வழங்கும் திட்டம் எப்போது நிறைவுபெறும் என்றும் புதிய ரகத் துப்பாக்கிகளை சிங்கப்பூரிலேயே தயாரிக்கும் திட்டம் உண்டா என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தற்காப்பு அமைச்சிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

