சாங்கி விமான நிலைய மூன்றாம் முனையப் பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து, சாலைத் தடுப்பில் மோதியதை அடுத்து 20 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
மே 21ஆம் தேதி பிற்பகல் 12.40 மணியளவில் பேருந்துச் சேவை எண் 858 அவ்வாறு மோதியதாக டவர் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்தது.
சம்பவத்தில் பேருந்து ஓட்டுநரும் அதில் பயணம் செய்த 21 பயணிகளும் காயமடைந்ததாக நிறுவனத்தின் தொடர்பு, வாடிக்கையாளர் அனுபவப் பிரிவு இயக்குநர் கிளென் லிம் கூறினார்.
இதுகுறித்து விசாரிக்கும் வேளையில், காயமடைந்த பயணிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவி வழங்க அவர்களைத் தொடர்பு கொண்டிருப்பதாக அவர் சொன்னார். பாதிக்கப்பட்டோர் டவர் டிரான்சிட் நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
சாங்கி விமான நிலைய மூன்றாம் முனையத்திற்கு அருகே நடந்த இச்சம்பவம் குறித்து மே 21ஆம் தேதி பிற்பகல் 12.45 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
காயமடைந்த 20 பேரில் 10 பேர் செங்காங் பொது மருத்துவமனைக்கும் ஒன்பது பேர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கும் ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டதாக அது தெரிவித்தது.
மேல்விவரங்கள் தொடர்பில் செர்டிஸ் நிறுவனத்தைத் தொடர்புகொண்டிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

