உலகத்தரம் வாய்ந்த சிறந்த 1,000 நகரங்களின் புதிய பட்டியலில் சிங்கப்பூர் 42வது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ஃபர்ட் எகனாமிக்ஸ் நிறுவனம், மே 21ஆம் தேதி அந்தப் பட்டியலை வெளியிட்டது. உலக நகரங்கள் குறியீட்டுப் பட்டியலை அது வெளியிடுவது இதுவே முதல்முறை.
27 அம்சங்களின் அடிப்படையில் நகரங்கள் மதிப்பிடப்பட்டன.
நியூயார்க், லண்டன், சேன் ஹோசே (கலிஃபோர்னியா மாநிலம், அமெரிக்கா) ஆகியவை பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
பட்டியலின் முதல் 50 இடங்களைப் பெரும்பாலும் அமெரிக்க, ஐரோப்பிய நகரங்கள் பிடித்துள்ளன.
ஜப்பானியத் தலைநகரான தோக்கியோ நான்காவது இடத்தில் இருந்தபோதும் மற்ற ஆசிய நகரங்கள் 40க்குப் பிந்திய இடங்களையே பெற்றுள்ளன.
தென்கொரியத் தலைநகர் சோல் 41வது நிலையிலும் சிங்கப்பூர் 42வது நிலையிலும் உள்ளன.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன், சிட்னி, பெர்த் ஆகிய நகரங்கள் முறையே ஒன்பதாவது, 16வது, 23வது இடங்களைப் பிடித்தன.
தொடர்புடைய செய்திகள்
பொருளியல், மனிதவளம், வாழ்க்கைத் தரம், சுற்றுச்சூழல், நிர்வாகம் எனும் ஐந்து முக்கியப் பிரிவுகளின்கீழ் நகரங்கள் மதிப்பிடப்பட்டதாகக் கூறப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு வளர்ச்சி ஆகிய அம்சங்களில் முக்கியக் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தப் பட்டியல் உலகின் ஆகப் பெரிய 1,000 நகரங்களின் பலம், பலவீனம் ஆகியவற்றின் மதிப்பீடு என்று கூறிய ஆக்ஸ்ஃபர்ட் எகனாமிக்ஸ், முன்னுரைப்புகளுடன் சேர்த்துக் கணக்கிட்டால், அமைப்புகளும் கொள்கை வடிவமைப்பாளர்களும் உத்திபூர்வ முடிவுகளை எட்டுவதற்கு இது கூடுதல் உதவியாக விளங்கும் என்று கூறியது.
பட்டியலில் முதல் இரண்டு நிலைகளில் உள்ள நியூயார்க்கும் லண்டனும் வாழ்க்கைத் தர அம்சத்தில் முறையே 278, 292வது இடங்களில் உள்ளதாகக் கூறப்பட்டது.

