இளம்பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் செய்வதில் தாமதம்: ஆய்வு

இளம்பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் செய்வதில் தாமதம்: ஆய்வு

2 mins read
4015780f-245c-4231-9fd2-be52ca272c84
குழந்தைப் பாதுகாப்புச் சேவை 2017 முதல் 2021 வரை, 1,343 குழந்தைப் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களைக் கையாண்டது.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வயது மூத்த பிள்ளைகளைக் காட்டிலும், இளம் பிள்ளைகள் தங்களுக்கு நடந்ததைப் பற்றி தாமதமாகப் புகார் செய்யும் சாத்தியம் அதிகம்.

சிங்கப்பூரில் அத்தகைய சம்பவங்கள் தாமதமாக வெளிப்படுவதற்கான காரணங்கள், பிள்ளைகளிடையே பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் அது தெரியவந்தது.

முதல் முறை பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடந்ததற்கும் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதற்கும் இடையிலான காலம் சராசரியாக ஏறக்குறைய 32 மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் எட்டு மாதங்கள் என ஆய்வு கூறுகிறது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சில் மருத்துவ, தடயவியல் உளவியல் சேவைக்கு 2017 முதல் 2021 வரை அனுப்பப்பட்ட 21 வயதுக்குக் குறைவான 227 பெண்கள், 25 ஆண்கள் இடையே 252 சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அமைச்சின் குழந்தைப் பாதுகாப்புச் சேவை இவர்களில் பெரும்பாலானோரை அங்கு அனுப்பியது.

குழந்தைப் பாதுகாப்புச் சேவை 2017 முதல் 2021 வரை, 1,343 குழந்தைப் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களைக் கையாண்டது.

தங்களுடன் வசிக்கும் சகோதரர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானோர், அதைப் பற்றித் தெரிவிக்க ஆக அதிக காலம் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் சராசரியாக ஏறக்குறைய 46 மாதங்கள், அதாவது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தெரிந்த நபர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் ஆக விரைவில், சராசரியாக ஏறத்தாழ 13 மாதங்களில் வெளிப்படுத்தப்பட்டன.

மேலும் கடுமையாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானோர், அதைப் பற்றித் தெரிவிக்க கூடுதல் காலம் எடுத்துக்கொண்டனர்.

சிங்கப்பூரில் குழந்தைப் பாலியல் துன்புறுத்தல், அதைப் பற்றித் தாமதமாகப் புகார் அளித்தல் ஆகியவற்றின் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதல் வெளிப்படையான ஆய்வு இது என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பல பிள்ளைகளுடன் செயல்பட்டுள்ள அமைச்சின் உளவியலாளர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்