பெட்டாலிங் ஜெயா: லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்தபோது கடுமையாக ஆட்டங்கண்ட எஸ்கியூ321 விமானத்தில் பயணம் செய்த மலேசியர்கள் ஒன்பது பேர் பேங்காக்கில் உள்ள இரு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் ஆறு பேர் சமிதிவெஜ் ஸ்ரீநகரின் மருத்துவமனையிலும் மேலும் மூவர் சமிதிவெஜ் சுகும்வித் மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒன்பது பேருக்கும் உடலில் ஏற்பட்ட காயங்களுடன் உள்காயமும் ஏற்பட்டிருப்பதாகவும் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக ஆனால் சீராக இருப்பதாகவும் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளதாக அமைச்சு சொன்னது.
பேங்காக்கில் உள்ள மலேசியத் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடனும் மருத்துவமனைகளுடனும் இணைந்து செயல்படுவதாகவும், தூதரக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மலேசியர்களை மருத்துவமனைகளில் சென்று பார்த்து தூதரக உதவி வழங்குவதாகவும் அது கூறியது.
எஸ்கியூ321 விமானத்தில் பயணம் செய்தவர்களில் 16 பேர் மலேசியர்கள் என்று கூறப்பட்டது.