சிங்கப்பூர் ஏர்லைன்சின் எஸ்கியூ321 விமானம் ஆக மோசமாக ஆட்டங்கண்டதில் பயணி ஒருவர் மாண்ட சம்பவத்தை அடுத்து, புளூம்பெர்க் நிறுவனம் உலகின் ஆக மோசமான, நிலையற்ற விமானப் பாதைகள் குறித்துத் தகவல் வெளியிட்டுள்ளது.
சிலியின் சேண்டியாகோவிலிருந்து பொலிவியாவின் சாண்டா குருஸ் நகரை இணைக்கும் விமானப் பாதைதான் விமானங்கள் ஆக மோசமாக ஆட்டங்காணும் பாதை என்று ‘டர்ப்லி’ இணையத்தளம் கூறுகிறது.
தோக்கியோவிலிருந்து கிளம்பும் நீண்டதூர விமானச் சேவைகள் பல இத்தகைய பாதிப்பை எதிர்கொள்கின்றன.
குறிப்பிடத்தக்க வகையில் வெவ்வேறு வேகம் கொண்ட காற்றின் அலைகள் ஒன்றிணையும்போது விமானங்களை ஆட்டங்காணச் செய்யும் வலுவான மாற்றம் உருவாகிறது. மலைகளுக்குமேலும் புயல் மேகங்களுக்கு இடையிலும் பறக்கும் விமானங்கள் இத்தகைய சிக்கலைச் சந்திக்கின்றன.
எடுத்துக்காட்டாக, சேண்டியாகோ - சாண்டா குருஸ் பாதையில் பசிபிக் பெருங்கடலிலிருந்தும் அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்தும் ‘ஆண்டீஸ்’ மலைக்குக் கிட்டத்தட்ட செங்குத்தாகக் காற்று வீசும்போது விமானங்கள் கடுமையாக ஆட்டங்காணும் சூழல் ஏற்படும்.
நிலநடுக்கோட்டுப் பகுதியிலும் இத்தகைய சூழல் உருவாகும்.
ஜப்பானில் உயரமான மலைகள் அதிகம் என்பதாலும் பெருங்கடலிலிருந்து வீசும் காற்றாலும் இவ்வாறு நேரக்கூடும். ‘டர்ப்லி’ இணையத்தளத்தில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றின் அரசாங்க வானிலை ஆய்வகங்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில், உலகின் 150,000 விமானப் பாதைகளை மதிப்பீடு செய்து அந்த இணையத்தளம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளதாக புளூம்பெர்க் நிறுவனம் கூறியது.