சிங்கப்பூரில் வாழும் பெளத்த சமயத்தவர்கள் பௌத்த ஆலயத்துக்குச் சென்றும் நன்கொடைகள் வழங்கியும் புதன்கிழமை விசாக தினத்தைக் கொண்டாடினர்.
ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள சாக்கியமுனி (புத்தகயா) ஆலயத்தில் விசாக தினத்தையொட்டி அதிகாலை 5.30 மணியிலிருந்து மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர்.
கிட்டத்தட்ட 15 மீட்டர் உயர புத்தர் அமர்ந்த நிலையில் இருக்கும் இந்த ஆலயம், இந்தியர்கள் அதிகளவில் செல்லும் பௌத்த ஆலயமாகத் திகழ்கிறது. விசாக தினத்தை முன்னிட்டு மேலும் அதிகமான இந்தியர்கள் அக்கோயிலில் வழிபாடு செய்தனர்.
ஆலயத்திலிருந்த மற்றொரு புத்தர் சிலையிலிருந்து தங்க முலாமை தொட்டு தங்கள் நெற்றிகளில் திலகமிட்டு பக்தர்கள் வழிபட்டனர். பெளத்த துறவிகளின் புனிதநீரைப் பெற்று, புத்தர் சிலைக்கு புனித நீர் ஊற்றுவது, விளக்கு வைப்பது போன்ற வழிபாடுகளை பக்தர்கள் மேற்கொண்டனர்.
தாய்லாந்தைச் சேர்ந்த நடனமணிகள் ஆலயத்தின் முன்னின்று நடனமாடி ஆலயத்திற்கு நிதி திரட்டும் முயற்சியில் இறங்கினர்.
“நாங்கள் இளம் வயதிலிருந்து இந்த பௌத்த ஆலயத்திற்கு வருவோம். அப்பா என்னையும் என் உடன்பிறந்தவர்களையும் இங்கு அழைத்து வருவார். இந்த ஆலயம் எனக்கு பல நினைவுகளை அளித்துள்ளது,” என்று ஆலோசனைத் துறையில் பணியாற்றும் மலர் பாளையன், 55, கூறினார்.
“நானும் என் கணவரும் முதல்முறையாக எங்கள் குழந்தையை விசாக தினத்தன்று இந்த ஆலயத்துக்கு அழைத்து வந்துள்ளோம். புத்தரின் ஆசியை பெற்று எங்கள் வாழ்க்கை இனிதே தொடங்க வேண்டுமென்று நான் பிரார்த்தனை செய்துகொண்டேன்,” என்று தேவதர்ஷினி, 20, சொன்னார்.
செயின்ட் மைக்கல்ஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்காரமையா ஆலயத்தில் ஏராளமான சிங்களவர்கள் விசாக தினத்தில் ஒன்றுகூடினர். அங்கு பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டதோடு சமூக உணர்வுடன் தங்கள் உற்றார் உறவினர்களைச் சந்தித்து மதிய உணவு உபசரிப்பிலும் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த ஈராண்டுகளாக நான் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறேன். எனது குடும்பத்தினர் அனைவரும் இலங்கையில் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒன்றாக விசாக தினம் கொண்டாட முடியாமல் போனாலும் சிங்கப்பூரில் நான் பல நண்பர்களைச் சந்தித்துள்ளேன். அவர்களுடன் விசாக தினத்தைக் கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்று தகவல் தொழில்நுட்ப பொறியாளரான அமிலா வேலெந்தகோடா, 42, சொன்னார்.

