லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த எஸ்கியூ321 விமானம், மே 21ஆம் தேதி, கடுமையாக ஆட்டங்கண்ட சம்பவத்தில் உயிரிழந்த 73 வயது பிரிட்டிஷ் ஆடவர் தன் மனைவியுடன் விடுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
காப்பீட்டுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜெஃப்ரி கிச்சன், இசை நாடக நிறுவன இயக்குநரும் ஆவார்.
ஆறு வார விடுமுறைப் பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா செல்லும் வழியில் சிங்கப்பூரில் தங்கிச்செல்லவும், பின்னர் ஜப்பான், இந்தோனீசியா ஆகிய நாடுகளுக்குச் செல்லவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பிரிஸ்டலுக்கு அருகே உள்ள தார்ன்பரி நகரில் அவர் வசித்துவந்தார். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருப்பதாக ‘த கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.
தனது தந்தை மிகவும் அன்பானவர், கண்ணியமானவர் என்று கூறிய அவரது மகள் உள்ளூர்ச் சமூகத்தினரிடையே புகழ்பெற்றவர் என்றும் குறிப்பிட்டார்.
திரு ஜெஃப்ரியின் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்த நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் இசை நாடகத் துறையில் அவரது திறமை, ஆர்வம், பங்களிப்பு போன்றவற்றைப் புகழ்ந்து கூறியதுடன் தனிமனிதராக அவரது நற்பண்புகளையும் பாராட்டினர்.
எஸ்கியூ321 விமானம் கடுமையாக ஆட்டங்கண்ட வேளையில் திரு ஜெஃப்ரி மாரடைப்பால் காலமானதாகக் கருதப்படுகிறது.