லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த எஸ்கியூ321 விமானம் கடுமையாக ஆட்டங்கண்டபோது, பயணிகள் பலரும் இருக்கைவார் அணியவில்லை என்று 28 வயது மலேசிய மாணவர் ஸஃப்ரான் அஸ்மீர் கூறினார்.
விமானம் ஆட்டம் காணத் தொடங்கியதுமே தான் இருக்கைவார் அணிந்திருப்பதை உறுதிசெய்து கொண்டதாக அவர் கூறினார்.
“திடீரென்று விமானம் கீழே விழுந்தபோது இருக்கைவார் அணியாமல் அமர்ந்திருந்த அனைவரும் விமானத்தின் உட்புறக்கூரையிலோ பயணப்பை வைக்கும் பகுதியிலோ மோதிக் கீழே விழுந்தனர்.
“என் கைத்தொலைபேசி எங்கோ பறந்து விழுந்தது. பயணிகளின் காலணிகளும் பறந்து விழுந்தன,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
சிப்பந்திகளும் கழிவறைகளில் இருந்தோரும் மோசமாகப் பாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார். பலருக்கும் முதுகுத்தண்டிலும் தலையிலும் காயம் ஏற்பட்டதாக ஸஃப்ரான் கூறினார்.