சிங்கப்பூரும் கஸக்ஸ்தானும் பொருளியல் ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு, நிறுவன தரநிலைகள், அறிவுசார் சொத்து (ஐபி) உரிமைப் பாதுகாப்பு, உயர்கல்வி, சட்டப் பிரச்சினைகளுக்கு சமரசத் தீர்வு ஆகிய ஆறு அம்சங்களில் ஒத்துழைக்க இணங்கியுள்ளன.
கஸக்ஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவின் இருநாள் அதிகாரத்துவப் பயணத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (மே 23) அவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
அரசுத் தலைவராக அதிபர் டோகாயேவ் சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை. எனினும் அவர் சிங்கப்பூருக்கு நன்கு அறிமுகமானவர். 1970களில் அரசதந்திரியாக பணியாற்றி இருக்கும் அவர், 2004ல் வெளியுறவு அமைச்சராகவும் 2016ல் செனட் சபையின் தலைவராகவும் சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளார்.
கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட கஸக்ஸ்தான், மத்திய ஆசியாவில் குடியரசின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது.
கஸக்ஸ்தானுடன் கையெழுத்திடப்பட்ட பொருளியல் ஒத்துழைப்பு ஒப்பந்தம், ஒத்துழைப்புக்கான புதிய துறைகளை ஆராய்வது, அதை ஊக்குவிப்பதற்கான ஒரு வழியாக நெருக்கமான உறவுகளை வளர்ப்பது ஆகிய நோக்குடன் வரையப்பட்டுள்ளது.
மே 23ஆம் தேதி கையெழுத்தான சேவைகள், முதலீட்டு ஒப்பந்தம், யுரேசிய பொருளியல் மன்றம் - சிங்கப்பூர் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாடு கட்டமைப்பின் கீழ் வருகிறது.
கடந்த 2018 நவம்பர் 21இல் கையெழுத்தான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், அண்மையில் நடப்புக்கு வந்தது.
தொடர்புடைய செய்திகள்
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வணிகத்தை வலுப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை (மே 23) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சரக்குகளில் இருதரப்பு வணிகம் இவ்வாண்டில் 46.3 விழுக்காடு அதிகரித்து 2023ல் $603.1 மில்லியனாக இருந்தது. சேவைத் துறையில் இருதரப்பு வணிகம் 172.9 விழுக்காடு அதிகரித்து 2022ல் $67.4 மில்லியன் ஆக இருந்தது.
கடந்த 2022ல் கஸக்ஸ்தானில் சிங்கப்பூரின் நேரடி முதலீடு $960 மில்லியனாக இருந்தது. அதே நேரத்தில் சிங்கப்பூரில் கஸக்ஸ்தானின் நேரடி முதலீடு $1.3 பில்லியனாக முதலிடத்தில் உள்ளது.
2023 டிசம்பர் நிலவரப்படி, சிங்கப்பூரில் 180 கஸக்ஸ்தான் நிறுவனங்கள் பதிவுசெய்துள்ளன. கஸக்ஸ்தானில் கிட்டத்தட்ட 30 சிங்கப்பூர் நிறுவனங்கள் பதிவுசெய்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் நாடுகடந்த குற்றங்களைத் தடுக்கவும் முறியடிக்கவும் வகைசெய்கிறது.
இதில் போதைப்பொருள், மனநிலை பாதிக்கும் பொருள்கள், இணையக் குற்றங்கள், மோசடிகள், சொத்து மீட்பு உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகள் அடங்கும் என்று உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.
தொழில் நிறுவனங்களுக்கான தேசிய தரங்கள் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம், உணவு, தளவாடங்கள், நிலைத்தன்மை உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த துறைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
கல்வி தொடர்பான ஒப்பந்தம், இரு நாடுகளின் உயர் கல்வி நிறுவனங்களுக்கு இடையில் அதிக அளவிலான நிறுவனப் பங்காளித்துவம், மக்களுக்கு இடையிலான பரிமாற்றங்களுக்கு வழிவகுக்கிறது என்று கல்வி அமைச்சு கூறியது.
இறுதி உடன்பாட்டின்படி, தகவல் பரிமாற்றங்கள், பயிற்சி, நிகழ்வுகள் போன்றவற்றின் மூலம், இரு நாடுகளும் அனைத்துலக வர்த்தகப் பூசல் தீர்வு, சட்ட உதவி ஆகியவற்றில் மேலும் அணுக்கமாகச் செயல்பட வகை செய்கிறது.
முன்னதாக, வியாழக்கிழமை காலை, அதிபர் டோகாயேவிற்கு இஸ்தானாவில் அதிகாரத்துவ வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அதிபர் தர்மன் சண்முகரத்னத்தைச் அவர் சந்தித்தார்.
தொடர்ந்து, பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்து, ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் சடங்கில் பங்கேற்றார்.
பின்னர் பிரதமர் வோங் அதிபர் டோகாயேவுக்கு மதிய உணவு விருந்தளித்தார்.
மதிய உணவுக்குப் பின்னர் ஷாங்ரிலா ஹோட்டலுக்குச் சென்ற அதிபர் டோக்கயேவ் அங்கு கஸக்ஸ்தான் - சிங்கப்பூர் வர்த்தக மன்றத்தில் உரையாற்றினார். துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இந்நிகழ்வில் பங்கேற்றார்.
மாலையில் அதிபர் தர்மன் இஸ்தானாவில் அளிக்கும் அரசாங்க விருந்தில் அதிபர் டோகாயேவும் அவரது பேராளர் குழுவினரும் பங்கேற்பர்.
2023 மே மாதம் அப்போதைய அதிபர் ஹலிமா யாக்கோப் கஸக்ஸ்தானுக்கு மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணத்தைத் தொடர்ந்து அதிபர் டோகாயேவ்வின் பரஸ்பரமான வருகை இடம்பெற்றுள்ளது. சிங்கப்பூர் அதிபர், கஸக்ஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டது அதுவே முதல் முறையாகும்.
அதிபர் டோக்கயேவ் வெள்ளிக்கிழமை (மே 24) 46வது சிங்கப்பூர் சொற்பொழிவை வழங்க உள்ளார். தென்கிழக்காசியக் கல்விக் கழகமும் யூசோஃப் இஷாக் கல்விக்கழகமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.
பயணத்தின் இறுதி அங்கமாக, மூத்த அமைச்சர் லீ சியன் லூங் - அதிபர் டோகாயேவ் இடையேயான சந்திப்பு இடம்பெறும்.

