சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பங்கு விலை சரிவு

1 mins read
57276093-c20a-46b5-9fa4-3c8280e56d31
நடுவானில் ஆட்டங்கண்ட எஸ்கியூ321 பயணிகள் விமானம். - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எஸ்கியூ321 பயணிகள் விமானம் நடுவானில் ஆட்டங்கண்டதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்கு விலை சரிந்தது.

அச்சம்பவம் நிகழ்ந்த பிறகு முதன்முறையாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பங்குகள் விற்பனைக்கு விடப்பட்டபோது இந்நிலை உருவானது. எனினும், இதனால் அந்நிறுவனத்துக்குப் பெரிய அளவில் நிதி சார்ந்த பாதிப்பு ஏதும் இருக்காது என்று நம்பப்படுவதாகப் பங்குச் சந்தை தரகர்கள் கூறுகின்றனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பங்கு விலை வியாழக்கிழமை (மே 23) காலை 0.9 விழுக்காடு குறைந்து 6.70 வெள்ளியாகப் பதிவானது. அந்நிறுவனத்தின் 4.2 மில்லியன் பங்குகள் வர்த்தகத்தில் இடம்பெற்றன. அந்த எண்ணிக்கை சற்று குறைவானதாகக் கருதப்படுகிறது.

பங்குச் சந்தை திறந்துவிடப்பட்டபோது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பங்கு விலை 1.6 விழுக்காடு சரிந்தது. ஆனால் விரைவில் மீண்டு வரவும் செய்தது.

செவ்வாய்க்கிழமையன்று (மே 21) எஸ்கியூ321 விமானம் நடுவானில் ஆட்டங்கண்டதால் மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் உயிரிழந்தார். அச்சம்பவத்தில் மேலும் பலர் காயமுற்றனர்.

அந்த விமானம் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்துக்கு மாற்றிவிடப்பட்டது.

கடந்த இரு நாள்களில் பெரும்பாலான பயணிகள் சிங்கப்பூர் திரும்பிவிட்டனர். புதன்கிழமை (மே 22) நிலவரப்படி 20 பேர் இன்னும் பேங்காக் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்