சிங்கப்பூரில் அழிந்துபோன சதுப்பு நிலத் தாவர வகை ஒன்றை மீண்டும் வளர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் இம்முயற்சியை மேற்கொள்கிறது. அந்த சதுப்பு நிலத் தாவர வகைக்கான விதைகளைக் கழகம், மலேசியாவிலிருந்தும் இந்தோனீசியாவிலிருந்தும் தருவிக்கத் திட்டமிட்டுள்ளது.
அந்த தாவர வகைக்கான காப்பகத்தை சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் உருவாக்கும்.
தனது மாணவர்களும் ஊழியர்களும் பல்வேறு வகையான சதுப்பு நிலத் தாவர வகைகளைப் பாதுகாப்பதோடு அழிந்துபோனவற்றுக்கு மீண்டும் உயிர்கொடுக்கச் செய்ய கழகம் எண்ணம் கொண்டுள்ளது. அதற்குப் புதிய காப்பகம் ஒரு சோதனைத் தளமாக விளங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை மாதத்திலிருந்து தேசிய பூங்காக் கழகத்துடன் இணைந்து புதிய காப்பகத்துக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கவிருப்பதாக சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் வெள்ளிக்கிழமையன்று (மே 24) தெரிவித்தது. 2025ஆம் ஆண்டு டிசம்பருக்குள் கட்டுமானப் பணிகள் முடிவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கோலில் உள்ள சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், தற்போது கட்டப்பட்டுவரும் பொங்கோல் கோஸ்ட் பெருவிரைவு ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு அருகே புதிய காப்பகம் அமையும். அது, ஜேடிசி பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தின் முக்கியப் பகுதியில் அமைந்திருக்கும்.
பொங்கோல் மரபுடைமைப் பாதைக்குச் செல்வோர் புதிய காப்பகத்துக்கு எளிதில் போகலாம்.
‘பிரவுன்லோவியா அர்ஜென்டாடா’ எனும் தாவரத்துக்கு உயிர்கொடுக்க சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் திட்டமிட்டுள்ளது. சதுப்பு நிலங்களில் வளரும் அந்தத் தாவரம், சிங்கப்பூரில் முற்றிலும் அழிந்துபோன ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் காணப்படாத உயிரினங்கள்தான் முற்றிலும் அழிந்துபோனவையாக வகைப்படுத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
‘பிரவுன்லோவியா அர்ஜென்டாடா’ இன்னமும் மலேசியாவிலும் இந்தோனீசியாவிலும் காணப்படுவதாக புதிய காப்பகத்தை உருவாக்கும் திட்டத்தை வழிநடத்தும் சிசார் ஜுங்-ஹராடா தெரிவித்தார். அதை மீண்டும் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்த சரியான பராமரிப்பும் உகந்த சுற்றுச்சூழலும் இருக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அப்போதுதான் அந்தத் தவார வகை தொடர்ந்து தழைக்கும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
“சதுப்பு நிலத் தாவரங்கள் மற்ற வகை மரங்களுடன் சேர்ந்துதான் செழிப்பாக வளரும். அவை சுற்றுச்சூழல் கட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. அவை கடலடிப் புல் (சீகிராஸ்), பவளப்பாறைகள், பூஞ்சை ஆகியவற்றினால் பலனடையும். சதுப்பு நில ‘லாப்ஸ்டர்’ வகைகள், நண்டுகள், பறவைகள், தேனீக்கள் உள்ளிட்ட உயரினங்களும் அவற்றுக்கு அவசியம்,” என்று சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் வடிவமைப்புப் பிரிவின் இணைப் பேராசிரியரான ஜுங்-ஹராடா விவரித்தார்.

