புதிய வகுப்பறைகள், தொழுவதற்கு குளிரூட்டப்பட்ட வசதிகள், சமூகங்கள் ஒன்றுகூடுவதற்கான இடம் ஆகிய அம்சங்களுடன் சிங்கப்பூரில் இருக்கும் ஆக தொன்மையான தமிழ் முஸ்லிம் பள்ளிவாசலான ஜாமிஆ சூலியா புதுப்பொலிவு பெற்றுள்ளது.
2022ன் நான்காவது காலாண்டில் ஜாமிஆ சூலியா பள்ளிவாசலின் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கின. முஸ்லிம் சமூகத்திற்கு நிரந்தரமாக அறக்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தில் இந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது.
பள்ளிவாசலின் தரையில் புதிய ஓடுகள், புதிய அலுவலகம், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோருக்குப் பள்ளிவாசலுக்குள் நுழைய எளிதான வழி போன்றவை புதிய வசதிகளில் அடங்கியுள்ளன.
பள்ளிவாசல் செல்வோர்க்கு இந்தப் புதிய மாற்றம் தொழுகையின்போது சௌகரியமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும், சுகாதார இரண்டாம் அமைச்சரும், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி சிறப்பு விருந்தினராகப் பள்ளிவாசல் விழாவில் கலந்துகொண்டார்.
அவருடன், உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் இணைப்பேராசிரியர் டாக்டர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் விழாவில் கலந்துகொண்டார்.
அதோடு, விழாவில் அறிவிக்கப்பட்ட மற்றொரு திட்டம் முத்தாய்ப்பாக அமைந்தது. ‘ஜாமிஆ சூலியா மரபுடைமை’ எனும் புதிய வர்த்தக மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பள்ளிவாசலுக்குப் பின்னால் இருக்கும் நிலத்தில் புதிய குடியிருப்புகள், சாப்பிடுவதற்கான இட வசதி போன்றவை 2026ன் நடுப்பகுதிக்குள் அமைக்கப்படும்.
இந்தத் திட்டம், ‘வாகாஃப் ரிவைட்டலைசேஷன் ஸ்கீம்’ எனும் திட்டம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தென் இந்தியாவைச் சேர்ந்த சூலியா சமூகத்தினரின் முயற்சிகளை நினைவுகூரும் விதமாக ஜாமிஆ சூலியா மரபுடைமை விளங்கும் என்று நம்பப்படுகிறது.
“ஜாமிஆ சூலியா மரபுடைமை வெறும் ஒரு கட்டடமாக மட்டும் கருதப்படக்கூடாது. அது நம் இந்திய முஸ்லிம் சமூகத்தினர் எடுத்துள்ள முயற்சிக்கு ஒரு சிறந்த சமர்ப்பணமாக விளங்குகிறது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி நம் இந்திய முஸ்லிம் சமூகத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும்,” என்று அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தமது உரையில் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“இன்றைய நிகழ்ச்சி நம் முஸ்லிம் சமூகத்தினருக்கு ஒரு பெரிய மைல்கல்லாக உள்ளது. நம் சமூகத் தலைவர்கள் எடுத்துள்ள முயற்சியை இது பறைசாற்றுகிறது. வெவ்வேறு சமூகங்களும், சமூகத் தலைவர்களும் கைகோத்து இந்த மரபுடைமையைப் பாதுகாக்க வேண்டும்,” என்று இணைப்பேராசிரியர் டாக்டர் ஃபைஷால் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
“ஜாமிஆ சூலியா மரபுடைமையின் மேம்பாடு நம் இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்குப் பிற்காலத்தில் பெரிய நன்மைகளை அளிக்கும். இதன் மூலம் வரும் நிதியை வைத்து இந்திய முஸ்லிம் சமுதாயத்தினர் நிச்சயமாகப் பயன் பெறுவார்கள்,” என்று பள்ளிவாசலின் தலைவர் ரஷீத் ஜமான் கூறினார்.
“தொழுகை இடத்தில் குளிரூட்டப்பட்ட வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற பின்னூட்டம் எங்களுக்குக் கிடைத்தது. பல ஆண்டு திட்டத்திற்குப் பிறகு நாங்கள் இந்த மறுசீரமைப்புப் பணியை தொடங்கி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.
“20 ஆண்டுகளுக்கு மேலாக நான் இந்தப் பள்ளிவாசலில் சேவை செய்து வருகிறேன். பள்ளிவாசலை அடுத்த தலைமுறையினரின் கையில் ஒப்படைப்பதற்குமுன் என்னால் முடிந்தவரை நான் தொடர்ந்து சேவை செய்து வருவேன்,” என்று பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் ஷேக் ஃபக்ருதீன் கூறினார்.

